தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேச்சு

நீலகிரி: தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் மாநாடு தொடங்கியது.

ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் துணை வேந்தர்களை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று என்று தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.

அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும், தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியியல், அறிவியல் பாடங்களை பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் இளைஞர்கள் படிக்கிறார்கள். பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

 

The post தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும்: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: