இந்திய அரசியல் குறித்து வெளிநாட்டில் பேசுவதா?: ராகுலுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

ஜோகன்ஸ்பர்க்: இந்திய அரசியல் குறித்து வெளிநாட்டில் பேசுவதா? என்று ராகுலுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் புலம் பெயர் இந்தியர்கள் கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், இந்தியாவில் உள்ள நடைமுறைகள், திறன்கள் போன்றவற்றை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கூட நான் பார்த்தது இல்லை. கடந்த ஆண்டு இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு உலகிலேயே அதிகளவாக ரூ.7.09 லட்சம் கோடி ஆக அதிகரித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நிறவெறிக்கு எதிரான தென்னாப்பிரிக்க மக்களின் போராட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. கடந்த 30 ஆண்டுகளில் இரு நாடுகள் இடையேயான உறவுகள் மிக பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது’’ என்றார்.

பேட்டி முடிந்த பின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், அமெரிக்கா,சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததையும், பாஜ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு கட்டவிழ்த்து விடப்பதாக குற்றம் சாட்டியது பற்றியும் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர்,‘‘ இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து வெளிநாட்டில் பேசுவது கண்டனத்துக்குரியது. நான் வெளிநாடு சென்றால் அங்கு அரசியல் பேசுவது இல்லை. இந்தியாவுக்கு சென்றபிறகு அது குறித்து விவாதிக்கவும், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

The post இந்திய அரசியல் குறித்து வெளிநாட்டில் பேசுவதா?: ராகுலுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: