ஒடிசா ரயில் விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்கள் நிர்கதியான சோகம்

பரைபூர்: ஒடிசா ரயில் விபத்து புலம்பெயர் தொழிலாளர்களின் பல குடும்பங்களையும் நிர்கதிக்கு தள்ளியுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் பலியான பலரும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களே. அதிலும் அதிகம் பேர் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். இவ்வாறு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபரையும் இந்த கோர விபத்தில் இழந்ததால் தற்போது அவர்களின் குடும்பங்கள் நிர்கதியாகி உள்ளன. மேற்கு வங்கம் 24 பர்கனாஸ் மாவட்டம் சாரனிகளி கிராமத்தை சேர்ந்த ஹரன் கயன் (40), நிஷிகந்த் கயன் (35), திபாகர் கயன் (32) 3 சகோதரர்களும் ஒடிசா ரயில் விபத்தில் பலியாகி உள்ளனர். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி கோரமண்டல் ரயிலில் வந்த போது பலியாகி உள்ளனர். இதில் ஹரனின் மனைவி அனாஜிதா நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இப்போது அவரது சிகிச்சை கேள்விக்குறியாகி உள்ளது. 3 சகோதரர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வருமானம் ஈட்டும் குடும்ப தலைவனை இழந்து 3 சகோதர்களின் குடும்பமும் நிர்கதியாகி உள்ளன.

ஹரனின் மகன் அவிஜித் கூறுகையில், ‘‘என் தந்தையும், சித்தப்பாக்களும் பல ஆண்டாக சென்னைக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். விடுமுறையில் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார்கள். தற்போது விவசாய கூலி வேலை தேடித்தான் சென்னைக்கு சென்றார்கள். ஆனால், ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டனர். இந்த விபத்து எங்கள் குடும்பத்தையே நாசமாகி விட்டது’’ என அழுது புலம்பினார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்கள் நிர்கதியான சோகம் appeared first on Dinakaran.

Related Stories: