ஆண்டுக்கு 250 பவுண்டு ஆக்சிஜன் தரும் மரம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

மன்னார்குடி: பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் பற்றிய நேரடியான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் 1972ல் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து மன்னார்குடியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பொறியாளர் சம்பத் கூறுகையில், ஒரு தனி மரம் ஆண்டுக்கு 250 பவுண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது 2 மனிதர்கள் ஓராண்டு சுவாசிக்க போதுமானதாகும். அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றன. இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாக செய்து வருகின்றன என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர், மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக்கல்லூரி பேராசிரியை ராதிகா மணிமாறன் கூறுகையில், வீட்டின் நான்கு மூலையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள் வெப்பநிலை 6 முதல் 10 டிகிரி வரை குறைகிறது. இதனால் ஏசிக்கு செலவாகும் மின்சாரத்தில் 35 சதவீதம் குறைகிறது. எந்த மரமும் வடி கட்டிய சுத்தமான நீரை எதிர் பார்ப்பதில்லை, வீட்டு கழிவு நீரை திருப்பி விட்டாலும் போதும். சூழலுக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்வது அவசியம். மா, ஆல், அரச மரங்கள் போன்றவை நெடு நாள் பயன் தரக்கூடியவை. எனவே எதிர்கால சந்ததிகள் வாழ மரம் வளர்ப்போம், சுற்றுச் சூழல் காப்போம் என்றார்.

The post ஆண்டுக்கு 250 பவுண்டு ஆக்சிஜன் தரும் மரம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம் appeared first on Dinakaran.

Related Stories: