பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு பாஜ பிரமுகர் போக்சோவில் கைது: போலீசார் விசாரணை

சென்னை: லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் சிவன் கோயில் அருகில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஒருவன் பைக்கில் இருந்து அழுதபடி இறங்கினான். அப்போது, அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனிடம் என்ன நடந்தது என விசாரித்தனர். அதற்கு அந்த சிறுவன், நான் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறேன். நான் லிப்ட் கேட்டு ஒருவரின் வண்டியில் வில்லிவாக்கத்தில் ஏறினேன். பின்னர், பாடி மேம்பாலம் அருகே இருட்டான பகுதியில் அந்த நபர் வண்டியை நிறுத்தினார். பின்னர் என்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என அழுது கொண்டே கூறினான்.

அவன் கூறியதை அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த பையனை அழைத்து வந்தவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அந்த நபர் சற்றும் வாய் திறக்காமல் அங்கிருந்து செல்லவே முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொதுமக்கள் அவர் ஓட்டி வந்த வண்டியை சோதனை செய்தபோது, அந்த பைக்கில் பாஜ கட்சியின் கொடி, துண்டு மற்றும் பாஜ அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் அடையாள அட்டை இருந்தது தெரிய வந்தது. அந்த அடையாள அட்டையில் அம்பத்தூர் பகுதி பாஜ பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் என்று குறிப்பிட்டு அதில் பாலச்சந்திரன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பொதுமக்கள் இவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து, சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருவதை அடிப்படையாக வைத்து, வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். பள்ளி மாணவனின் தாய் நேற்று புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, போலீசார் சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த பாஜ பிரமுகர் பாலசந்தரை (47) பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மீது போச்சோவில் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு பாஜ பிரமுகர் போக்சோவில் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: