வெங்காய மூட்டைகளுக்குள் பதுக்கி 1.40 டன் குட்கா கடத்திய 2 பேர் கைது: வேன், குட்கா பறிமுதல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடியில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள 1.40 டன் குட்காவை ேபாலீசார் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்துக்குள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் (சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை) கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் நள்ளிரவில் சோதனையிட்டனர்.

அப்போது வெங்காயம் பாரம் ஏற்றி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில் வெங்காய மூட்டைகளுடன் ஹான்ஸ், விமல் போன்ற தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு குட்கா கடத்தி செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக வேன் டிரைவர் கர்நாடகத்தை சேர்ந்த மகேந்திரன்(32), பிரமோத்(22) ஆகியோரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து லாரியில் உள்ள குட்கா பொருட்களை ஆய்வு செய்தனர். அதில் 30 வெங்காய மூட்டைகளுக்குள் 1.40 டன் எடையுள்ள ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

குட்காவை யாருக்கு கொண்டு செல்ல இருந்தனர் என்பது குறித்து கைதான மகேந்திரன், பிரமோத் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மைசூர் பகுதியைச் சேர்ந்த பவன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வெங்காய மூட்டைகளுக்குள் பதுக்கி 1.40 டன் குட்கா கடத்திய 2 பேர் கைது: வேன், குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: