சேலத்தில் ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல்: ஆட்களை வேலைக்கு வைத்து கல்லா கட்டுகின்றனர்

சேலம்: சேலத்தில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும் பணியில் கும்பல் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆட்களை வேலைக்கு வைத்து வங்கிகளில் மாற்றி வருகின்றனர். கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாகவும், தற்போது அந்த நோட்டுகளை வைத்துள்ளவர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம், எனத்தெரிவித்தது.

மேலும், ரூ.20,000 வரையில் 2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கி கேஷியரிடம் கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதாக இருந்தால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் 2000 ரூபாய் நோட்டுகளாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள், தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கியில் மாற்றி வருகின்றனர். அதேவேளையில், மிக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ள பெரும் வியாபாரிகள், அதனை மாற்றிக் கொள்ள பலவகைகளில் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சேலத்தில், டவுன் கடைவீதி, கோட்டை, திருச்சி மெயின்ரோடு, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை பகுதிகளில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் நடத்தி வரும் வட மாநில வியாபாரிகள், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புரோக்கர்களை நாடி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கடைவீதிகளில் உள்ள வியாபாரிகளை ஒரு கும்பல் தொடர்பு கொண்டு, கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கிறது.

ரூ.500 முதல் ரூ.800 வரை கமிஷன் எடுத்துக் கொண்டு 2000 ரூபாயை மாற்றிக் கொடுக்கின்றனர். கையில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் சுற்றித்திரியும் இக்கும்பலை சேர்ந்தவர்கள், நேரடியாக வியாபாரியிடம் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு நோட்டுக்கு ரூ.800 வரை கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை உடனடியாக கொடுக்கின்றனர். இதனால், வட மாநிலத்தை சேர்ந்த பல வியாபாரிகள், தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை கமிஷனுக்கு மாற்றி வருகின்றனர்.

இதுபற்றி வட மாநில வியாபாரிகள் கூறுகையில், “மொத்தமாக தங்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்தினால், பல பிரச்னைகள் வரும். சிறிது சிறிதாக மாற்ற நினைத்தால், தொழிலை விட்டுவிட்டு, வங்கி வாசலில் தினமும் நிற்க வேண்டும். அதனால், ரூ.500 முதல் ரூ.800 வரை கமிஷன் கொடுத்து, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறோம். இதனை நாங்கள் முறையாக தான் சம்பாதித்தோம். ஆனாலும் மொத்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் இத்தகைய செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு பணத்தை மாற்றிக் கொடுக்கும் நபர்கள், ஆட்களை வேலைக்கு வைத்து வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதனால், எவ்வித பிரச்னையும் இல்லை’’ என்றனர்.

The post சேலத்தில் ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல்: ஆட்களை வேலைக்கு வைத்து கல்லா கட்டுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: