40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம்

தாம்பரம், ஜூன் 4: மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல ஆயிரம் டன் குப்பை கொண்டு வந்து கொட்டப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் பல ஆயிரம் டன் குப்பை கொட்டப்பட்டு தலைபோல் குவிந்திருப்பதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வந்ததுடன் ஈக்கள் மற்றும் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பையால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குப்பை கிடங்கின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மூச்சு திணறல், தோல் வியாதி, ஆஸ்துமா என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எனவே, அப்பகுதியில் உள்ள குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 95 சதவீத குப்பைக் கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு அகற்றியுள்ளனர். மீதமுள்ள குப்பையை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர் பெரியநாயகம் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது எம்எல்ஏவிடம், அங்குள்ள குப்பையை முழுமையாக அகற்றி, மீண்டும் அங்கு குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

n சுமார் 40 ஆண்டுகளாக மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
n குப்பை கிடங்கின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அடிக்கடி தீவைக்கப்படுவதால் ஏற்படும் புகை மண்டலத்தால் மூச்சு திணறல், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

வாகன பராமரிப்பு, பார்க்கிங் வசதி
குப்பை கிடங்கை ஆய்வு செய்த பிறகு எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ கூறியதாவது: கன்னடபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக குப்பை மலைபோல தேங்கி கிடப்பதால், வெயில் காலத்தில் திடீர் திடீரென தீப்பற்றி எரிவதாலும், நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றவுடன், முக்கிய கோரிக்கையாக கன்னடபாளையம் குப்பை கிடங்கு குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது உள்ளாட்சி மூலம் குப்பை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த குப்பை கிடங்கு இருக்கும் பகுதி புதுதாங்கல் ஏரியின் ஏழு ஏக்கர் நிலம், இந்த குப்பை கிடங்கையொட்டி செல்லும் சாலை மயானத்திற்கு செல்வதற்கும், பக்கத்தில் இருக்கின்ற நகருக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

ஆனால் குப்பை கொட்டப்பட்டதால், இச்சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, குப்பை முழுமையாக அகற்றப்பட்டு, இச்சாலை முறையாக பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை முழுமையாக அகற்றிய பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் குப்பை கொட்டாமல் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்துவதற்கும், அந்த வாகனங்களை பராமரிப்பதற்கும், சம்பந்தப்பட்ட இடத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், அங்குள்ள சாலையை பக்கத்தில் உள்ள நகரின் சாலையுடன் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நிதி தேவைப்பட்டால் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்குவதற்கும் தயாராக இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post 40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: