திருவள்ளூர், ஜூன் 4: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் 8,458 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1940 முதல் 1944ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு கிருஷ்ணா நிதி நீர் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 0 பாயிண்ட் வரை 152 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் பூண்டியில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் வரை கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது.
குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின் படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் குடிநீர் ஆதாரமான நீர்தேக்கங்களில் நீர் இருப்பினை ஆய்வு செய்து இந்தாண்டுக்கு தேவையான குடிநீர் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்பட பல்வேறு நீர்த்தேக்கங்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா ஆய்வு செய்தார்.
அப்போது, சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா குடிநீர் இணைப்புக் கால்வாய், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா குடிநீர் கால்வாய் தமிழக எல்லையில் நுழையும் பகுதியான ‘0’ பாயிண்ட், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் மற்றும் அதன் நீரேற்று நிலையம், சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத்தாமரை, பிற நீர்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவு பொருட்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்றவும், மேலும் இணைப்பு கால்வாயின் இருபுறமும் சிதிலமடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்வதுடன் கால்வாயின் இருபுறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணிக்குமாறும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரங்களிலும் அதன் இணைப்பு கால்வாயிகளிலும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவு நீரினை கலப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றும் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு மதகுகள் சேதமடைந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,222 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 355 கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே நீர் இருப்பு அதிகளவில் இருப்பதால் மதகுகளை சீரமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அடுத்த ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் ஆதாரமான நீர்தேக்கங்களில் நீர் இருப்பினை ஆய்வு செய்து இந்தாண்டுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளதையும் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் உறுதி செய்தனர். இந்த ஆய்வின்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் முத்தையா, தலைமைப் பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய தலைமைப்பொறியாளர் ஜெயகர் ஜேசுதாஸ், கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் மொத்தக் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,222 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 355 கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே நீர் இருப்பு அதிகளவில் இருப்பதால் மதகுகளை சீரமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அடுத்த ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post பூண்டி நீர்த்தேக்கத்தில் குடிநீர் வாரிய கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு: கழிவு நீரை கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.