சின்னஏரியை ₹5.20 கோடியில் புனரமைக்க முடிவு

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்னஏரியை ₹5.20 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைகப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஆந்திரா, கர்நாடாக எல்லையில் அமைந்துள்ள மாவட்டமாகும். இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த நகரத்தின் வழியாக தான் சென்று வருகின்றன. பெரும்பாலானோர் கிருஷ்ணகிரியில் உள்ள புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து தான் செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகள், தங்களது ஊர்களுக்கு செல்லும் பஸ் வரும் வரை, பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டியுள்ளது. அவர்கள் பொழுது போக்குவதற்கு வசதியாக, புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்னஏரியில் படகு இல்லம், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்னஏரியில் ஆகாயத்தாமரை செடிகள், களை செடிகள், முட்செடிகள் முளைத்து, குப்பை கொட்டப்பட்டு, துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து, இந்த ஏரியை புனரமைக்க, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, திமுக அரசால் டெண்டர் விடப்பட்டு, சின்ன ஏரியை புனரமைத்து படகு சவாரி, நடைபாதை சாலைகள், மின்விளக்குகளுடன் இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ₹3.36 கோடி மதிப்பில் பணி துவக்கப்பட்டு, கடந்த 2021ம் டிசம்பர் மாதம் 29ம் தேதி, அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், பணிகள் நடக்காததால் சின்ன ஏரி புனரமைப்பு ஒதுக்கப்பட்ட நிதி, ரத்து செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பணியை முடிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அப்பணிகளை துவங்க, தற்போது ₹5.20 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், சின்னஏரியை மாவட்ட கலெக்டர் சரயு, நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சின்ன ஏரியை சுற்றி அமைக்கப்படும் நடைபயிற்சி தளம், மின் விளக்குகளுடன் கூடிய இருக்கைகள், படகு சவாரி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், நகராட்சி ஆணையர் வசந்தி, திமுக நகர செயலாளர் நவாப், வட்ட செயலாளர் அமீர்சுஹேல் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சின்னஏரியை ₹5.20 கோடியில் புனரமைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: