ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் நாளை (5ம்தேதி) காலை 10 மணி முதல் வெளியாகும். இதில் சேர விரும்பும் மாணவர்கள், தேவையான விவரங்களை இணைத்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு ₹500ம், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ₹250ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்துவோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணைய வங்கி சேவையை பயன்படுத்தலாம். இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் முழு விவரங்களை உள்ளீடு செய்த பின்பே, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தளத்தின் மூலம் பணம் செலுத்திய பிறகு தான், விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே, அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும். இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரிக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் பயனடையும் வகையில், கல்லூரி முடித்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: