கோழிக்கடை உரிமையாளர் கொலை; முக்கூடலில் பதற்றம்; போலீஸ் குவிப்பு: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

பாப்பாக்குடி: முக்கூடலில் கோழிக்கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவரது மனைவி மாரியம்மாள் (65). 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 2வது மகன் சண்முகசுந்தரத்துடன் வசித்து வந்த ஆறுமுகம், வீட்டின் முன் பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்தார்.

நேற்றிரவு 7 மணி அளவில் கோழிக்கடையில் இருந்த ஆறுமுகத்தை 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு, தப்பியோடி விட்டது. இதுகுறித்து முக்கூடல் எஸ்ஐ ஆக்னல் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆறுமுகத்தின் உறவினர்கள் நெல்லை- முக்கூடல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை எஸ்பி சிலம்பரசன், சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் உயரதிகாரிகள் உறுதியளித்தும் நள்ளிரவு 1 மணி வரை மறியல் செய்தனர். பின்னர் முக்கூடல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆறுமுகத்தின் உறவினர்கள், எஸ்பி சிலம்பரசனிடம் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நெல்லை எஸ்பி சிலம்பரசன், சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், முக்கூடல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷேக் அப்துல்காதர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலையானவரும், குற்றம்சாட்டப்பவர்களும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் முக்கூடலில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள் உள்பட சுமார் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post கோழிக்கடை உரிமையாளர் கொலை; முக்கூடலில் பதற்றம்; போலீஸ் குவிப்பு: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: