ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஏல நகையை மீட்டு தருவதாக ரூ.30 லட்சம் பறித்த கும்பல் கைது: பணம், கார் பறிமுதல்

ராசிபுரம்: ராசிபுரத்தில் குறைந்த விலைக்கு ஏல நகைகளை வாங்கி தருவதாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்கள் உள்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பரான திருப்பூரை சேர்ந்த ஜெய், சேலத்தை சேர்ந்த தனசேகரன் ஆகியோர் மூலம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வெப்படை பாரதி நகரைச் சேர்ந்த சிவஞானம்(50) என்பவருடன், ஜெகநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஜெகநாதனிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த சிவஞானம், அவரை நகை ஆசை காட்டி ஏமாற்ற திட்டம் தீட்டினார். அதன்படி, திருச்சியைச் சேர்ந்த பாலாஜி மனைவி ஜானகி (எ) புவனேஸ்வரி (26) என்பவர் மூலம், ஜெகநாதனிடம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 165 பவுன் தங்க நகை ஏலத்திற்கு வருவதாகவும், அதனை ரூ.30 லட்சம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஜெகநாதன், கடந்த புதன்கிழமை ரூ.30 லட்சம் பணத்தை எடுத்து வந்து, சிவஞானம் மற்றும் ஜானகி ஆகியோரிடம் கொடுத்து விட்டு, ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் நுழைவு பகுதியில் காரிலேயே அமர்ந்திருந்தார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டு சென்ற ஜானகி மற்றும் சிவஞானம் ஆகியோர், மற்றொரு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர். நீண்ட நேரம் ஆகியும், பணத்தை வாங்கிச் சென்றவர்கள் திரும்பி வராததால், ஜெகநாதன் வங்கிக்குள் சென்று பார்த்தபோது அவர்கள் இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து, ராசிபுரம் போலீசில் அவர் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இதுதொடர்பாக சந்தேகத்துக்குரிய 2 நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் சிவஞானம் மற்றும் புவனேஸ்வரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சத்யா(36), ராமச்சந்திரன்(43), அவரது மனைவி கெஜலட்சுமி(43) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஏல நகையை மீட்டு தருவதாக ரூ.30 லட்சம் பறித்த கும்பல் கைது: பணம், கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: