காதலன் ஏமாற்றியதால் மாணவி தற்கொலை சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை: கோத்தகிரியில் பரபரப்பு

கோத்தகிரி: காதலனால் ஏமாற்றப்பட்ட பாலிடெக்னிக் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரிவிக்காமல் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர். இதற்கிடையே காதலன் ஏமாற்றிய ஆதாரரம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தொட்டன்னியை சேர்ந்தவர் பிரகாஷ் (45). இவரது மனைவி கலாமணி (40). இவர்களது இளைய மகள் பிரியதர்ஷினி (19) அவிநாசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். மே மாதம் விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி பிரியதர்ஷினி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். இதையடுத்து அவரது தாய், ஏன் அழுகிறாய்? என கேட்டபோது, வீட்டின் அருகே வசிக்கும் லாரி டிரைவரான நந்தகுமார் தன்னுடன் பழகி காதலித்ததோடு தவறாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நந்தகுமாரிடம் கலாமணி கேட்டபோது, ‘‘காதலித்தது உண்மைதான். கல்யாணம் செய்து கொள்ள முடியாது’’ எனக் கூறியுள்ளார். இருவரது வீடும் அருகருகே இருந்ததால் ஏதாவது பிரச்னை வந்து விடும் என்று பயந்த கலாமணி தனது மகள் பிரியதர்ஷினியை அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கும்படி கூறிவிட்டு கூலி வேலைக்கு சென்றார். இந்த நிலையில் 31ம் தேதி அதிகாலை பாட்டி வீட்டில் பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகள் காதலனால் ஏமாற்றப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால், சம்பவம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக போலீசுக்கு தெரிவிக்காமல் பிரியதர்ஷினியின் சடலத்தை அருகே உள்ள சுடுகாட்டில் பெற்றோர் புதைத்தனர். இந்நிலையில் பீரோவில் இருந்த பிரியதர்ஷினியின் துணிகளை எடுத்தபோது, அதனுள் மறைத்து வைத்திருந்த செல்போன் கீழே விழுந்துள்ளது.

இதனை பிரியதர்ஷினியின் சகோதரி ஆன்செய்து பார்த்தபோது நந்தகுமாருடன் பிரியதர்ஷினி ஒன்றாக இருக்கும் போட்டோக்களும், இருவரும் காதலித்தபோது இன்ஸ்டாவில் பரிமாறிக்கொண்ட உரையாடல்களும் இருந்துள்ளது. காதலித்து ஏமாற்றப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்ததை தொடர்ந்து, கலாமணி கோத்தகிரி போலீசில் தனது மகளின் தற்கொலைக்கு நந்தகுமார்தான் காரணம் என்றும், மகளை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை செய்ததாகவும் புகார் அளித்தார்.

இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று, புதைக்கப்பட்ட மாணவி பிரியதர்ஷினியின் உடலை மருத்துவக்குழுவினர் தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் தீவிரமாக விசாரித்து வருகிறோம். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் எப்படி இறந்தார் என்பதற்கான முழுவிவரமும் தெரியவரும். நந்தகுமாரையும் பிடித்து விசாரிப்போம் என்றனர்.

The post காதலன் ஏமாற்றியதால் மாணவி தற்கொலை சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை: கோத்தகிரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: