சுயதொழில் துவங்க 35 சதவீத மானியத்துடன் வங்கி கடனுதவி

கிருஷ்ணகிரி, ஜூன் 3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பிசினஸ் சாம்பியன்ஸ் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கை கலெக்டர் சரயு துவக்கி வைத்து, திட்டம் தொடர்பான வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்துதல், தானியங்கு பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தைத்தல், மளிகை கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், நகரும் அலகுகள் கொண்ட ட்ராவல்ஸ், கான்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெப்ரிஜிரேட் ட்ரக் ஆகிய தொழில்கள் துவங்க கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். மொத்த திட்டத்தொகையில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ₹1.5 கோடியாகும்.

இத்திட்டத்தின் கீழ், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த எந்த தனி நபரும் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர், கூட்டாண்மை, ஒருநபர் கம்பெனி, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன் பெற, விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. மொத்த திட்டத்தொகையில் 65 சதவீத வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது, எச்டிஎப்சி வங்கியின் சார்பாக 2 பயனாளிகளுக்கு சுயதொழில் மற்றும் பொக்லைன் இயந்திரம் வாங்குவதற்கான மானியத்தொகை ₹24.44 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் ராமமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post சுயதொழில் துவங்க 35 சதவீத மானியத்துடன் வங்கி கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: