திருச்சி அருகே நள்ளிரவில் பரபரப்பு லாரி டயர்களை உருட்டி விட்டு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 6 பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிப்பால் பயணிகள் அவதி

திருச்சி: திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரைகளை உருட்டி விட்டு ரயிலை கவிழ்க்க நடந்த சதியில் 6 பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில் 2 நாட்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும். 5 நிமிடங்களுக்கு பின் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

வழக்கம்போல் அந்த ரயில் நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து 12.35 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. ரங்கம் ரயில் நிலையத்தை தாண்டி லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12.50 மணி அளவில் வாளாடி என்ற இடமருகே தண்டவாளத்தின் நடுவே ஒரு லாரி டயர் கிடந்தது. அந்த டயரை ரயில் தாண்டிச்சென்ற போது, மற்றொரு டயர் தண்டவாளத்தின் நடுவில் உருண்டவாறு வந்தது. அந்த டயர் மீது ரயில் மோதியது. அப்போது பலத்த சத்தம் எழுந்தது. இதனால் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

ரயிலின் அடிப்பகுதியில் உள்ள பிரேக் இன்ஜின், மின் சாதன பெட்டி ஆகியவற்றில் டயர் மோதி சேதமடைந்ததால் இன்ஜினுக்கு அடுத்து இருந்த 6 பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் ரயில் நின்றதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஜின் டிரைவர், திருச்சி ரயில்வே நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் ரயில்வே தொழில்நுட்ப பொறியாளர்கள் வந்து கோளாறுகளை சரி செய்தபின் 20 நிமிடம் தாமதமாக நேற்று அதிகாலை 1.10 மணியளவில் அங்கிருந்து ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பிரபாகரன் தலைமையிலான ேபாலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் டயரை போட்டதோடு, ரயில் வரும்போது மற்றொரு லாரி டயரை தண்டவாளத்தில் உருட்டி விட்ட மர்மநபர்கள் யார்? அவர்கள் ரயிலை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post திருச்சி அருகே நள்ளிரவில் பரபரப்பு லாரி டயர்களை உருட்டி விட்டு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 6 பெட்டிகளின் மின் இணைப்பு துண்டிப்பால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: