கேரள தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் திருட்டு: வேலைக்கார பெண், டிரைவரை பிடிக்க ஆந்திரா விரைந்தது தனிப்படை

சென்னை: கேரள தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவரை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். சென்னை கோட்டூர்புரம் 4வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன்(42). தொழிலதிபரான இவர், ஆழ்வார்பேட்டையில் பழைய சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மனைவி சாவித்ரி, சின்னம்மா லீலா(75) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி மனோகரன் பாலக்காட்டில் வசித்து வரும் தனது மாமியாருக்கு உடல் நலம் சரியில்லை என்று சின்னம்மா லீலாவை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு தனது மனைவி சாவித்ரியுடன் சென்றுள்ளளார்.

பிறகு மார்ச் 16ம் தேதி வீட்டிற்கு வந்த மனோகரன் தனது படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்தபோது, அதில் வைத்திருந்த ஒரு ஜோடி வைர கம்மல், ஒரு வைர மோதிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வரலட்சுமி மற்றும் கார் டிரைவர் பாலு ஆகியோரிடம் கேட்டதற்கு நாங்கள் எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். இதற்கிடையே மனோகரன் மாமியார் கடந்த ஏப்ரல் 14ம் தேதி பாலக்காட்டில் இறந்துவிட்டார். இதனால் மீண்டும் மனோகரன் தனது மனைவியுடன் பாலக்காட்டிற்கு சென்றுவிட்டு கடந்த ஏப்ரல் 30ம் தேதி மீண்டும் சென்னை திரும்பி வந்த பார்த்தபோது, வேலைக்கார பெண் வரலட்சுமி ஆந்திராவுக்கு சென்றது தெரியவந்தது. கார் டிரைவர் பாலுவும் காணவில்லை. இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கடந்த மே 20ம் தேதி மீண்டும் பிரோவில் உள்ள நகைகளை சரிபார்த்த போது, அதில் இருந்து தங்கத்தோடு, வைர மோதிரம் என ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து தொழிலதிபர் மனோகரன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வரலட்சுமி மற்றும் கார் டிரைவர் பாலு ஆகியோர் இணைந்து நகைகளை சிறுக சிறுக திருடியது தெரியவந்தது. ஆந்திராவில் பதுங்கியுள்ள வேலைக்கார பெண் வரலட்சுமியை பிடிக்க போலீஸ் தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது.

The post கேரள தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் திருட்டு: வேலைக்கார பெண், டிரைவரை பிடிக்க ஆந்திரா விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: