ஒடிசா: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 ரயில்கள் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 135 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளின் அடியில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று பாலசோர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோரமண்டல் ரயில் விபத்தில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்தோரின் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 2533 0952, 044 – 2533 0953, 044 – 2535 4771 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 ரயில்கள் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.