100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் கொண்டாட்டம்

சென்னை: கலைஞரின் 100வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மரியாதை செலுத்துகிறார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதே போல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இது கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆகும். இதனால், நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்வும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்களின் நெஞ்சில் பதிய செய்யும் வகையிலும் அமைந்திட வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைஞரின் பிறந்தநாளான நாளை காலை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கு அவர் மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். மேலும் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ படத்திற்கும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். மேலும் சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்திலும் கலைஞரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாலை 5 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை திமுக கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்தினை வைத்து, கட்சி தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்திட, மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-வட்ட- கிளைக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, “ஊர்கள் தோறும் திமுக” எனும் தலைப்பில், கிளைக் கழகங்களில் அமைந்துள்ள திமுக பழைய கொடிக் கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்டங்கள் தோறும் அரசின் விதிகள் மற்றும் அனுமதியை பெற்று, “எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் “கழகமே குடும்பம்” எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: