உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கணிப்பு

ஓவல்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் முடிந்து சிறிது கால இடைவெளியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்க உள்ளதால் இந்திய அணி இந்த போட்டியை எப்படி எதிர்கொள்ளும் என அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ஏற்கனவே நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்வரும் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;
“ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது. எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன் ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.

மேலும் 2013க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்”என மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “இந்திய அணியில் விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் மிகவும் செயல்படுவார். அவர் இப்போது மிகவும் சிறப்பான ஃபார்மில் உள்ளார், அது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும்” என கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எளிமையாக வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியனாகும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: