ஆன்மிகம் பிட்ஸ்: கோட்டை மாரியம்மன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பச்சைத் தண்ணீர் மாரியம்மன்- நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது தண்ணீரில் கோயில் விளக்கை எரிய வைப்பது வழக்கம். திருவிழாவின் போது, தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, அதிகாலையில் பூசாரிகள் கோயில் கிணற்றில் புனித நீராடி, குடத்தில் தண்ணீரை எடுத்து வருவார்கள். அப்போது, அவர்கள் அம்மன் முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை அந்த விளக்கில் ஊற்றுவார்கள். பின்னர், அந்த விளக்கில் தீபம் ஏற்றியபோது, விளக்கு, எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் சுடர்விட்டு எரியும்.

இந்த அதிசயக் காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு, பக்தி பரவசம் அடைவார்கள். தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் எரிந்து பின்னர் அணைந்தவிடும். அதன்பின்னர் எண்ணெயை கொண்டு விளக்கில் மீண்டும் தீபம் ஏற்றப்படும். தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம், திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும்.

மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணெயை கொண்டுதான் விளக்கு எரிய வைக்கப்படும். முன்னோர் காலத்தில் ஒருமுறை கோயில் விளக்கில் எண்ணெய் தீர்ந்து போனதாகவும், அப்போது கோயில் பூசாரி ஊர் தர்மகர்த்தாவிடம் அம்மனுக்கு விளக்கு வைக்க எண்ணெய் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தர்மகர்த்தா, ஒரு வித விரக்தியுடன் பணம் இல்லை என்றும், சக்தியுள்ள மாரியம்மன் தானே, தண்ணீரை ஊற்றி பற்றவை விளக்கு எரியும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் கோயில் பூசாரிகள் தண்ணீர் ஊற்றி விளக்கை பற்ற வைத்தனர். அப்போது அம்மன் முன்பு பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரிந்துள்ளது. அப்போது தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை பார்த்த கோயில் பூசாரிகளும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனால் அன்று முதல் இங்குள்ள மாரியம்மன் ‘பச்சைத் தண்ணீர் மாரியம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.இந்த கோயில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது.

கோட்டை மாரியம்மன் – சேலம்

சூரிய, சந்திர கிரகணங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய, சந்திரகிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து காக்கிறாள் என்றும் சொல்கிறார்கள். ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில், அம்மையின் வெம்மையைக் குறைக்க பலி பீடத்தில் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி அம்மனைக் குளிர வைப்பார்கள். உப்பு, பருப்பு, மிளகு, வெங்காயம் போன்றவற்றை பிரார்த்தனைப் பொருட்களாக செலுத்துகின்றனர். கண்வலி, நெஞ்சுவலி போன்ற உபாதைகள் தீர, கண் மலர், மண் உரு, கை, கால், முகம் போன்ற பிரதிமைகளைப் பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். சேலம் மாநகரின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

சக்திபுரி – ஸ்ரீஇடைச்சீஸ்வர்

காமகாசுரன் காமப்பித்து பிடித்து, பெண்களை இம்சித்தான். அம்பிகையின் மீதும் இச்சை கொண்டான். அமராவதி ஆற்றங்கரையில் இடைக்குலப் பெண்ணாக, இடைச்சீஸ்வரியாக அம்மன் உதயமானாள். அங்கு சென்று அன்னையின் கரத்தினை வலுக்கட்டாயமாக பற்ற முயற்சித்தான் அரக்கன். உடனே அன்னை விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்தாள். அவனது தலையைப் பிடித்துத் திருகி எறிந்தாள்.

அந்தத் தலை இடைச்சீஸ்வரி கோயிலின் அக்கினி மூலையில் போய் விழுந்தது. தலையில்லா உடல் கோயிலின் முன்புறம் விழுந்தது. வதம் செய்த பிறகு உக்கிரம் தணியாதிருந்த அன்னையை ஈசன், சாந்தப்படுத்தினார். இச்சா, கிரியா, ஞான சக்திகளின் சங்கமமாக வீற்றிருக்கிறாள் அன்னை. பங்குனி மாதம் பௌர்ணமியன்று துளசி மாலை அணிந்து, மஞ்சள் சட்டை, சிவப்பு வேஷ்டி, பச்சை துண்டுடன், ஒரு மாதத்துக்கு அன்னைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் பெற இந்த அன்னை ஆசியளிக்கிறாள்.பழனி – கோவை சாலையில் 18 கி.மீ. தொலைவில் வயலூருக்கு அடுத்த சாமிநாதபுரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இந்த சக்திபுரி உள்ளது.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: கோட்டை மாரியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: