அறிந்த தலம் அறியாத தகவல்கள்: கானப்பேர் எனும் காளையார் கோயில்

கானப்பேர் எனும் காளையார் கோயில்

காளையார் கோயில் எனப் புகழ்பெற்ற இத்திருத்தலத்திற்குக் ‘கானப்பேர்’ எனும் திருநாமமும் உண்டு. மிகவும் பழைமையான புகழ் பெற்ற திருத்தலம்.

மூவர் சந்நதிகள்

இத்திருக்கோயிலில் வரிசையாக மூன்று சந்நதிகளில், மூன்று ஈசர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள்.

1) காளீஸ்வரர் – சொர்ணவல்லி
2) சோமேசர் – சௌந்தர நாயகி
3) சுந்தரேசர் – மீனாட்சி எனும் திருநாமங்களில் மூன்று ஈசர்களும், தேவியர்களுடன் எழுந்தருளி இருக்கிறார்கள்.

அமைப்பு

முதல் சந்நதி – நடுவிலும், இரண்டாவது சந்நதி – வலது பக்கமும், மூன்றாவது சந்நதி – இடது பக்கமும் உள்ளன. இவர்களில் முதல் சந்நதியில் எழுந்தருளி இருக்கும் காளீஸ்வரரே தேவாரப்பாடல் பெற்றவர்.

மூவர் பழமொழி

இந்த மூன்று ஈசர்களைப் பற்றியும் ஓர் அபூர்வமான பழமொழி உண்டு. `காளை தேட; சோமர் அழிக்க; சொக்கர்சுகிக்க’ என்பதே அப்பழமொழி.

பழமொழி உண்மை

காளீஸ்வரர் பெயரில்தான் திருக்கோயிலின் சொத்துக்கள், பட்டா என அனைத்தும் உள்ளன. அதனால் ‘காளை தேட’. ஆனால், இவருக்கென்று பெருமளவில் பிரம்மோற்சவமோ, மற்ற செலவுகளோ எதுவும் கிடையாது. சோமர் அழிக்க: இந்த சோமேசருக்குத்தான் பெரும் அளவிலான வைகாசி விசாகப் பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்பம், புஷ்பப் பல்லக்கு என அமர்க்களப்படும். விழாக்கள் அனைத்துமே சோமேசருக்குத் தான். சொக்கர் சுகிக்க: சுந்தரேசர் எனப் படும் சொக்கரோ, பலவிதமான படையல்கள் – நைவேத்தியம் என ஏற்றுக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறார். இவ்வாறு இந்த மூன்று ஈசர்களும் அருளாட்சி செய்யும் திருத்தலம்தான், காளையார் கோயில்.

பாடலை உருவாக்கியவர்

இங்கு சோமேசர் சந்நதிக்கு எதிரில் உள்ள பெரிய கோபுரம், மன்னர் மருது பாண்டியரால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரத்தின் மீது ஏறிப்பார்த்தால், மதுரை கோபுரம் தெரியும். இதை ஒட்டியே, ‘‘மதுரை கோபுரம் தெரிய கட்டிய மருது பாண்டியன் வாராண்டி!’’ எனும் கும்மிப்பாட்டு உருவானது.

மானா மதுரையில் இருந்து

இங்குள்ள மூன்று ஈசர் சந்நதிகள், மண்டபங்கள், பெரிதான கோபுரங்கள் ஆகியவற்றைக்கட்டித் திருப்பணி செய்தவர்கள், பெரியமருது, சின்னமருது சகோதரர்கள். இந்தக் கோபுரத் திருப்பணிக்குத் தேவையான செங்கற்கள், இந்த ஆலயத்தில் இருந்து தென்மேற்கில் ஏறத்தாழ 18-கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டன.

கோபுரம் காத்த கோ (மன்னர்) மருது பாண்டியர்

ஆங்கிலேயர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், இப்பகுதியில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் மருது பாண்டியர் சகோதரர்கள். போர் மூண்டது. அடுத்தவர்களின் வஞ்சனையால் மருது சகோதரர்கள் தோற்கடிக்கப் பட்டார்கள். தலைமறைவான பெரிய மருதுவைப் பிடிக்க வழிதெரியாமல் தவித்தான் ஆங்கிலக்கர்னல் ஆக்னியூ. அப்போது, கோபுரம்கட்டிய மருதுவின் மனதை உணர்ந்த கர்னல், ‘‘பெரியமருது பத்து நாட்களுக்குள் வந்து சரணடைய வேண்டும்.

இல்லாவிட்டால், பத்தாவது நாள் இந்தக் கோபுரம் இடிக்கப்படும்’’ என்று தண்டோரா போடச் செய்தான். பெரிய மருது சரணடைந்தார். அவர் வேண்டுகோளின்படி, காளீசர் சந்நதிக்கு எதிரில் உள்ள பொட்டலில் பெரியமருதுவுக்குச் சமாதி எழுப்பப்பட்டது. காளீசர் சந்நதி வாசலில், பெரிய மருதுவின் திருவுருவம் இன்றும் நின்று கொண்டிருக்கிறது.

சுவர்ண காளீஸ்வரர்

கறுத்த காளி வடிவில் இங்கிருந்த காளியை, சுவர்ண அதாவது தங்க வண்ணமாக சொர்ண வல்லியாக மாற்றி, மணந்த ஈஸ்வரனே ‘காளீஸ்வரர்’. அந்த சொர்ண வல்லியையும் தன் இடப்பாகத்தில் ஏற்றருளிய பின், ‘சொர்ண காளீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறார்.

காளையார் கோயில் பெயர் வந்த வரலாறு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரோடு, திருச்சுழியல் எனும் திருத்தலத்தில் தங்கியிருந்தார். அப்போது, அவர் கனவில் கானப்பேர் காளீஸ்வரர்; காளை வடிவில் செங்கையில் பொன் செண்டோடும் திருமுடியில் சுழியமுடன் எங்குமில்லாத திருவேடம் காட்டி, ‘‘சுந்தரா! யாம் இருப்பது `கானப்பேர்’ என்று கூறி மறைந்தார்.

கனவு கலைந்த சுந்தரர், கானப்பேர் எனும் இத்திருத்தலத்திற்கு வந்தார்; வரும்வழி எல்லாம், ‘‘கானப்பேர் உறை காளையையே’’ என்று, காளை வடிவில் கனவில் காட்சியளித்த காளீசரான சிவபெருமானைப் பாடியவாறே வந்தார். அன்று முதல் ‘கானப்பேர்’ எனும் இத்திருத் தலம், ‘காளையார் கோயில்’ என வழங்கப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேற்றிய தெய்வம்

மதுரையை வீரசேனர் எனும் மன்னர் ஆண்ட காலம்; மன்னரின் மனைவி – சோபனாங்கி. அவர்களுக்குக் குழந்தை செல்வம் இல்லை. அதனால் அவர்கள், தங்கத்தால் ஒரு குழந்தை பதுமையைச் செய்யச் செய்து, சுவர்ண புத்திரன் எனப் பெயரிட்டு, அதைப் பார்த்துப் பார்த்துத் திருப்தி அடைந்தார்கள். அந்த அரச தம்பதி, சுவர்ண காளீஸ்வரரைத் தரிசனம் செய்ய, சுவர்ண புத்திரன் எனும் தங்கப் பதுமையுடன் இங்கு வந்தார்கள். வந்தவர்கள், இங்குள்ள ருத்திர தீர்த்தத்தில் மூழ்கி, காளீஸ்வரரை வணங்கினார்கள்.

அப்போது ஈசனின் அருளால், அரச தம்பதி கொண்டுவந்த சுவர்ண புத்திரன் உயிர் பெற்று எழுந்து, ‘‘அம்மா! அப்பா!’’ என்றான். மன்னருக்கும் அவர் மனைவிக்கும் மெய் சிலிர்த்தது. உடனே காளீசர் – சொர்ணவல்லி; சோமேசர் – சௌந்தரவல்லி; கோயில்களைக் கட்டி, பூஜை, உற்சவங்கள் முதலானவைகளுக்கும் ஏற்பாடுகள் செய்தார்.

கானப்பேர் வந்த சோம சுந்தரர்

அவ்வாறு இரு ஈசர்களுக்கும் ஆலயங்கள் அமைத்த மதுரை அரசர், நாள்தோறும் தான் தரிசனம் செய்யும் சோமசுந்தரரைத் தரிசிக்க மதுரை சென்று வந்து கொண்டிருந்தார். ஒரு சமயம், கானப்பேரில் இருந்த மன்னரால், மதுரை செல்ல முடியவில்லை, மிகவும் வருந்தினார்.

அன்றிரவு மன்னர் கனவில் காட்சியளித்த மதுரை சோமசுந்தரர், ‘‘யாம் கானப்பேரில் எழுந்தருளி இருப்போம். இனி நீ கானப் பேருக்கும் மதுரைக்குமாக அலைய வேண்டாம். வருந்தாதே!’’ என்று கூறி, இடத்தையும் குறிப்பிட்டு மறைந்தார்.

கனவு கலைந்த மன்னர், மறுநாள் பொழுது விடிந்ததும் இறைவன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கே ரிஷபத்தின் அடிச்சுவடுகள் இருந்தன. அங்கேயே உடனே, மீனாட்சி – சுந்தரேஸ்வரருக்குக் கோயில் எழுப்பினார் மன்னர். மன்னரின் மனக்குறை தீர்த்த சுந்தரேஸ்வரர், அன்னை மீனாட்சி எழுந்தருளி இருப்பதன் வரலாறு இது. அந்த சுந்தரேஸ்வரரும் அன்னை மீனாட்சியும் நம்மனக்குறையையும் தீர்த்து அருளுமாறு வேண்டுவோம்! இந்த தலம் சிவகங்கையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post அறிந்த தலம் அறியாத தகவல்கள்: கானப்பேர் எனும் காளையார் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: