மாற்றங்களுடன் தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை..!!

டெல்லி: தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 124 ஏ சட்டப்பிரிவின் கீழ் தற்போது 3 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாற்றம் செய்து தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எத்தகைய செயல்களின் கீழ் தேச துரோக சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது 124 ஏ என்கின்ற சட்டப்பிரிவு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த கொடுங்கோல் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போதும் அதன் பிறகும் பிரிவு 124 ஏ ஒழிக்கப்பட வேண்டும் என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன.

இதனிடையே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் 124 ஏ சட்டப்பிரிவு, தற்போதைய நடைமுறைக்கு பொருந்தாது என கூறி வழக்கு தொடரப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. ஒன்றிய அரசின் பதிலை அடுத்து தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் சட்டத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில், மாற்றங்களுடன் தேசத் துரோக சட்டத்தை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

The post மாற்றங்களுடன் தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Related Stories: