பெரம்பலூர் கலெக்டர் தகவல் திருமானூர் வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

அரியலூர், ஜூன் 2: அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்தில் நடைபெற்ற 4 மற்றும் 5ம் வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழக அரசுப்பள்ளிக் கல்வித்துறையில் 2019ம் கல்வியாண்டில் இருந்து கொரோனாவின் தாக்கத்தினால் மாணவர்களிடத்தில் கற்றலில் இடைவெளி ஏற்பட்டது. 2021ம் கல்வியாண்டில் 1,2,3 வகுப்பு மாணவர்கள் அனைவரும் கற்றலில் ஒரே நிலையில் இருந்தனர். கற்றல் இடைவெளியை குறைக்கும் விதமாக 2022-2023ம் கல்வியாண்டில் 1,2,3 வகுப்புகளுக்கு அரும்பு, மொட்டு, மலர் நிலைகளில் எண்ணும் எழுத்தும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓராண்டு முடிவுற்ற நிலையில் குழந்தைகளின் கற்றல் நிலைக்கேற்ப 2023-2024 ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தொடர்ந்து கற்றல் கற்பித்தல் அனுபவங்களை வழங்கிட எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில், 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் பாடப்பொருளை (அரும்பு, மொட்டு மற்றும் மலர் வகுப்பு நிலைக்கான) எளிய செயல்பாடுகளாக மாற்றி கற்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பும் வகையில் வகுப்பறைகள் படைப்பாற்றல் களஞ்சியம், செயல்பாட்டுக் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம், வரலாற்றுக் களஞ்சியம், பேச்சுத்திறனை வளர்க்க உதவும் வானவில் மேடை, படைப்பாற்றலை வளர்க்க உதவும் வானவில் நேரம், வகுப்பறைக் கலந்துரையாடலுக்கு வாங்க பேசலாம், முன்கற்றதை நினைவு கூர உதவும் தமிழோடு விளையாடு, கணக்கோடு விளையாடு, ஆகா, அறிவியல், காலச்சுவடி போன்ற களஞ்சியங்களால் செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் கட்டகங்கள் தயாரிக்கப்பட்டு, மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சியானது மதுரை, பில்லர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சியானது 64 ஆசிரியர்களுக்கு அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளைக் கையாளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வட்டார அளவிலான பயிற்சியானது 6 ஒன்றியங்களிலும் நேற்று முதல் ஜூன் 3 வரை 698 ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது.

இதில், திருமானூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட கலெக்டர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) முருகண்ணன், மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் தகவல் திருமானூர் வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: