இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 32 கிலோ தங்கம் பறிமுதல்: கடலில் வீசப்பட்ட 11 கிலோ 3 நாட்களுக்கு பின் மீட்பு

மண்டபம்: இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்கம் 3 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் மீட்கப்பட்டது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் வழியாக சட்டத்துக்கு விரோதமாக கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், வலி நிவாரணி, பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த 30ம் தேதி இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மத்திய வருவாய் புலனாய்வு, இந்திய கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடா மண்டபம் தென் கடல் பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லா பைபர் படகு மணாலி தீவு அருகே நின்றது. ரோந்து பணி அதிகாரிகளை கண்டதும், படகிலிருந்தவர்கள் தப்பிக்க முயன்றதுடன் கடலில் 2 பார்சல்களை வீசினர்.

இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் பைபர் படகை பிடித்து அதில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையை சேர்ந்த 2 பேர், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரை, இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த மே 30ம் தேதி இரவு வேதாளையை சேர்ந்த மேலும் இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி 21 கிலோ 269 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கடலில் வீசிய பார்சலை மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் 3வது நாளாக நேற்று காலை தீவிரமாக தேடினர். கடலுக்கு அடியில் சென்று தேடும் இந்திய கடலோர காவல் படை ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் கடல் தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 15 பேர் குழு நீரில் ஒளிரும் விளக்கு, எக்கோ சவுண்ட் கருவி உள்ளிட்ட நவீன சாதனங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

கடல் சீற்றத்தால் தேடும் பணி தொய்வடைந்தது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து நடந்த தேடும் பணியில் மணாலி தீவு – சிங்கிலி தீவு இடையே கடலுக்கு அடியில் வீசிய பார்சல் மீட்கப்பட்டது. அதில் 11 கிலோ 600 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றியதாக மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 நாள் சோதனையில் ₹20.20 கோடி மதிப்பில் 32 கிலோ 869 கிராம் தங்கம் பிடிப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்த தங்கக்கட்டிகள் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 32 கிலோ தங்கம் பறிமுதல்: கடலில் வீசப்பட்ட 11 கிலோ 3 நாட்களுக்கு பின் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: