தாம்பரம்: ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக தாம்பரத்திற்கு கஞ்சாவை கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தாம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தலைமையில், தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் தாம்பரத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி நேற்று போலீசார், தாம்பரம் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவரை பிடித்து, விசாரித்ததால் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்ததால் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான் (27). இவர், ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்திவந்து, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் சில்லறை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 18 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஒடிசா மாநிலத்திலிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய வாலிபர் கைது: 18 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.