அம்பத்தூர் பகுதியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்: போலீசார் சமரசம்

அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குப்பம், புதூர், ஒரகடம், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்ற புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தூங்க முடியாமல், புழுக்கத்தில் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து புகார் அளிக்க போன் செய்தால், மின்வாரிய அதிகாரிகள் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை கள்ளிகுப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 5 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டிலிருந்து பாய், தலையணை ஆகியவற்றை எடுத்து வந்து சாலையில் படுத்துக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலமேலு தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

The post அம்பத்தூர் பகுதியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: