கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் 14 சவரன் திருடியவர் கைது: சிசிடிவி கேமராக்கள் பதிவு மூலம் 2 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் 14 சவரன் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். ஆவடி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (35). இவரது மனைவி சொர்ணத்தாய் (30). இவர்கள் நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில், உறவினர் திருமணத்துக்காக, திருச்சி செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர். அங்கு, திருச்சி செல்ல பேருந்து இல்லாததால், அங்கேயே தங்கள் சூட்கேஸ், பை போன்றவற்றுடன் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து, பேருந்து வந்ததும், தங்கள் உடைமைகளை எடுத்தபோது, நகை வைத்திருந்த பை காணமால் போனதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.

இதுகுறித்து, வடிவேல் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர், நகை பையை நைசாக திருடி செல்வது தெரியவந்தது. திருடிய நபர் எங்கு செல்கிறார் என்று கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனிக்கு பேருந்தில் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வடபழனிக்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த நபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

உடனே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்நபர் ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் கண்காணித்தபோது, ஆலந்தூர் பகுதியில், அந்த ஆட்டோ இருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிபிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் (46) என்பதும், சிவகங்கை செல்வதற்காக, கோயம்பேடு வந்தபோது, வடிவேல், சொர்ணத்தாய் ஆகியோர் தங்கள் பைகளை அடிக்கடி சரிபார்த்து கொண்டிருந்தனர்.

இதனை பயன்படுத்தி, நகை இருந்த பையை நைசாக திருடிகொண்டு, போலீசார் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக, வடபழனிக்கு பேருந்தில் வந்து, அங்கிருந்து ஆட்டோவில் ஆலந்தூருக்கு தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, 14 சவரன் இருந்த பையை பறிமுதல் செய்து, வடிவேலிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நகைகளை பெற்றுகொண்ட அவர்கள், போலீசாருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். போலீசார், சுந்தரலிங்கத்தை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். தம்பதியரிடம் இருந்து நகையை திருடி சென்ற நபரை, விரைவாக செயல்பட்டு, இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை, உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் 14 சவரன் திருடியவர் கைது: சிசிடிவி கேமராக்கள் பதிவு மூலம் 2 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Related Stories: