ஈக்காடு வேளாண் விரிவாக்க மையத்தில் சொர்ணவாரி, குறுவை சாகுபடிக்கான இடுப்பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் ஈக்காடு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தாமரைப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக ஈக்காடு வேளாண் விரிவாக்க மையத்தில் சொர்ணவாரி, குறுவை நெல் சாகுபடிக்கான விதைகள், வேளாண் இடுப்பொருட்களான உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவைகள் இருப்பு குறித்து திடீர் களஆய்வு மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்கள் முறையாக உரிய விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

இணையதளத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் இடுப்பொருட்களுக்கான மானிய விண்ணப்பங்கள், பட்டியல் இடும் முறை மற்றும் நிலுவை மானிய விண்ணப்பங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நிலுவை விண்ணப்பங்களுக்கு உண்டான இடுப்பொருட்களை உடனடியாக வழங்கி முடிக்க வேண்டும் என்று வேளாண் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் காலதாமதம் இல்லாமல் இடுப்பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும், சில்லரை உர விற்பனை நிலையங்களில் உரங்களை மத்திய அரசின் விற்பனை விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும், இதர இடுப்பொருட்களுடன் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளை வற்புறுத்தாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் வேளாண் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு இதனை உறுதி செய்ய வேண்டும் எனவும், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்ததாக, தாமரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நவரை பருவத்திற்கான நெல் கொள்முதல் பணியை திடீர் களஆய்வு மேற்கொண்டார். அங்கு நெல் கொள்முதலுக்கு பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளின் நில ஆவணங்கள், முன்னுரிமை வரிசை பதிவேடு, கிராம நிர்வாக அலுவலரின் e DPC இணையதள ஒப்புதல் மற்றும் நிராகரிப்பு செய்த விவரங்கள், ஒப்புதல் செய்யப்படாமல் நிலுவையிலுள்ள விவரங்கள் ஆகியவற்றை குறுக்காய்வு செய்து நிலுவையில் உள்ள பதிவு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக ஒப்புதல், நிராகரிப்பு வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலுக்கு இரண்டு e DPC அமைத்து கொள்முதல் பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் இங்கு NCCF நிறுவனம் சரிவர கொள்முதல் பணியினை மேற்கொள்ளாததால் மேற்படி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எடுத்து நடத்திட மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், வேளாண்மை உதவி இயக்குநர், ஸ்ரீசங்கரி, வேளாண்மை, உதவி வேளாண்மை அலுவலர்கள், ஞானசேகர், உதவி விதை அலுவலர், நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ஈக்காடு வேளாண் விரிவாக்க மையத்தில் சொர்ணவாரி, குறுவை சாகுபடிக்கான இடுப்பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: