பாட்னா எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

புதுடெல்லி: பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொது தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளதலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகரராவ், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்ளிட்ட மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 12ம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது.

பாட்னாவில் நடக்கவிருக்கும் பிரமாண்டமான கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தெரிவித்தார். ஆனால், கட்சி சார்பில் கூட்டத்தில் யார் பங்கேற்பார் என்பது குறித்து முடிவு செய்யவில்லை என அவர் கூறினார். ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் கூட்டத்தில் யார் பங்கேற்பது குறித்து கார்கே முடிவு செய்வார் என தெரிகிறது.

* ராஜஸ்தான் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வோம் என காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.அவர் கூறுகையில்“மே 29ம் தேதி நடந்த சந்திப்பில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, சுமூக முடிவு எட்டப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பது என உறுதியளித்துள்ளனர். கட்சிதான் பெரியது. எனவே அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.

The post பாட்னா எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: