அவதூறு வழக்கில் எம்பி பதவி பறிப்பு அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நான்: ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

ஸ்டான்போர்ட்: எம்பி பதவி பறிப்பு பற்றிய கேள்விக்கு அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்ற முதல்நபர் நான் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக கலிபோர்னியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சேர்ந்த அமிடி மற்றும் ஷான் சங்கரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். அவர்களுடன் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்கள் குறித்து நிபுணர்கள் குழுவின் விவாதத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: தொழில்நுட்ப பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும். எனது ஐ போன் கூட ஒட்டுக்கேட்கப்படுவது எனக்கு தெரியும். (அப்போது அவர் தனது ஐ போனை எடுத்து மிஸ்டர் மோடி என கூறினார்) அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு அரசு உங்கள் போனை ஒட்டுக்கேட்க வேண்டும் என நினைத்தால் யாரும் தடுக்க முடியாது. இது எனது உணர்வு. தொலைபேசியை ஒட்டு கேட்பதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்தால் அதை ஒன்றும் செய்யமுடியாது. நான் எதை செய்ய நினைத்தாலும், வேலை செய்தாலும் அது அரசுக்கு தெரியும். அது நாட்டின் நன்மைக்காகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இங்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவர்கள் குழு உள்ளது. அவர்களுடன் நான் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். தொடர்ந்து அவர்களுடன் பேச விரும்புகிறேன். இதுபோன்ற வெளிநாட்டு பயணங்களில் அதைச் செய்வது எனது உரிமை. இதற்காக நான் யாரிடமும் ஆதரவை நாடவில்லை. பிரதமர் ஏன் இங்கு வந்து அதைச் செய்யவில்லை என்று எனக்குப் புரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்த கேள்விக்கு ராகுல் பதில் அளிக்கும் போது,’ 2004ல் நான் அரசியலில் சேர்ந்தபோது, ​​நாட்டில் இப்படி நடக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. அவதூறுக்காக அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நானாக இருக்கலாம். இதுபோன்ற ஒன்று சாத்தியம் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஆனால் எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது உண்மையில் எனக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு இது நான் நினைக்கிறேன். அதுதான் அரசியலில் தீவிரமாக ஈடுபடும் வழி. இந்த நாடகம் உண்மையில் 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என்று நினைக்கிறேன்.

நாங்கள் போராடினோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் இந்தியாவில் போராடுகிறது. மிகப்பெரிய அளவில் எங்களுக்கு எதிராக பணம் பயன்படுத்தப்படுகிறது. அரசு அமைப்புகள் அவர்களின் கைப்பிடியில் உள்ளன. நம் நாட்டில் ஜனநாயக அடிப்படையில் இதை எல்லாம் எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். இந்த நேரத்தில் நான் ஒற்றுமை யாத்திரை சென்று முடித்தேன். நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் இந்த போராட்டம் எங்களுடைய போராட்டம்’ என்றார்.

* இந்தியா-சீனா உறவு மோசம்
ராகுல்காந்தியிடம், ‘அடுத்த 5-10 ஆண்டுகளில் இந்தியா-சீனா உறவு எவ்வாறு உருவாகும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: இந்தியா-சீனா உறவு இப்போது கடினமாக உள்ளது. அதாவது, அவர்கள் எங்கள் நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். இது கடினமானது. இது மிகவும் எளிதான ஒரு உறவு அல்ல. அதே சமயம் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எதுவும் நடக்கப் போவதில்லை. நாங்கள் ரஷ்யாவுடன் நட்புறவு வைத்துள்ளோம்.

எங்களுக்கு ரஷ்யா மீது சில நெருக்கமான உறவுகள் உள்ளன. எனவே உக்ரைன் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தான் நானும் எடுப்பேன். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வலுவான உறவு வேண்டும். உற்பத்தி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது முக்கியம். எனவே இருநாடுகளும் வெறுமனே பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துவது மட்டும் போதாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அவதூறு வழக்கில் எம்பி பதவி பறிப்பு அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நான்: ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: