அரசு மருத்துவமனைகளுக்கு தரம் குறைந்த மருந்து சப்ளை: 2 பேருக்கு ஓராண்டு சிறை.! செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனைகளுக்கு தரம் குறைந்த மருந்துகளை சப்ளை செய்த தனியார் நிறுவனத்தின் 2 நிர்வாக இயக்குநர்களை ஓராண்டு சிறையில் அடைக்க நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்போரூர் அருகே ஆலத்தூர் சிப்காட் பகுதியில் ஒரு தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நோய்களுக்கான ஏராளமான மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2006ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பாராசிட்டாமல் மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி தாம்பரம் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் சரக மருந்து ஆய்வாளர் இம்மருந்தின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார். இதில், அரசு மருத்துவமனைக்கு வழங்கி பாரசிட்டாமல் மருந்தின் தரம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த தனியார் மருந்து நிறுவனத்தின் இயக்குனர்கள் மகேந்திரா பி.ஜெயின், ராஜேஷ் பி.ஜெயின் மற்றும் அந்நிறுவனத்தின்மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் அந்த தனியார் நிறுவனத்தின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானது. இந்நிலையில், தரமற்ற மருந்துகளை தயாரித்து அரசு மருத்துவமனைகளுக்கு தனியார் நிறுவனத்தின் 2 நிர்வாக இயக்குநர்கள் சப்ளை செய்த குற்றச்சாட்டுகள் உறுதியானதால், நேற்று 2 நிர்வாக இயக்குநர்களுக்கு தலா ஓராண்டு சிறையும், தலா ₹60 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்நிறுவன இயக்குனர்கள் மற்றும் நிறுவனம் ஆகிய மூவரும் இணைந்து சுமார் ₹1.80 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post அரசு மருத்துவமனைகளுக்கு தரம் குறைந்த மருந்து சப்ளை: 2 பேருக்கு ஓராண்டு சிறை.! செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: