வியாழக்கிழமை வழிபாடு: எண்ணிய காரியங்கள் நிறைவேற்றும் சாய்பாபா..!!

வியாழக்கிழமை தோறும் சாய்பாபாவை குருவாக நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வந்தால், அனைத்துத் தடைகளும் நீங்கும். இந்த பிரபஞ்சத்தில், சாய்பாபைக் குருவாக நினைக்கும் மக்கள் ஏராளம் உள்ளனர். சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை உகந்த நாள் என்பதால், வியாழக்கிழமை தினத்தன்று விரதம் இருப்பர்.

வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து சாய்பாபாவை வழிபட்டு வந்தால், நன்மைகள் கிட்டும். விரதம் இருக்கும் போது, 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். நம் மனதை ஒருங்கிணைத்து சாய் பாபா நாமத்தை மட்டும் எடுத்துரைத்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். ஆண், பெண், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். எந்த செயலுக்காக விரதத்தை தொடங்கினோமோ, அதனை நம் மனதில் நினைத்து, சாய்பாபாவிற்கு விரதம் இருக்க வேண்டும்.

சாய் பாபா நாமத்தை உச்சரிப்பதுடன், விரதத்தை வியாழக்கிழமை தோறும் மட்டுமே செய்ய வேண்டும். விரதத்தை கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி செய்ய வேண்டும். சாய்பாபா விரதத்தைத் தொடர்ந்து ஒன்பது வாரங்களுக்கு இருக்க வேண்டும்.

சாய்பாபா விரதம் இருக்கும் முறைகள்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீராடி, மனதை ஒருங்கிணைத்து சாய்பாபாவிற்கு பூஜை செய்ய வேண்டும். சாய்பாபாவுக்குப் பூஜை செய்வதற்கான உகந்த நேரம் காலை அல்லது மாலை நேரமாகும். இந்த நேரங்களில் விரதத்தை நாம் மேற்கொள்ளும் போது வெறும் வயிற்றுடன் பூஜை செய்யக் கூடாது. ஏதேனும், பால், பழம், இனிப்புகள் போன்றவற்றை உட்கொண்ட பிறகே பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு எடுத்துக் கொள்ளலாம். சாய் பாபாவின் அறிவுரைப்படி, ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருந்து விரதத்தை கடைபிடிக்கக் கூடாது.

மேலும், விரதம் இருக்கும் போது சாய்பாபாவை வழிபடும் போது, சாய்பாபா படத்தை கீழே வைக்கக் கூடாது ஒரு சிறிய பலகை வைத்து அதன் மேலே ஒரு மஞ்சள் துணியை விரித்து, சாய்பாபா படத்தை வைக்க வேண்டும். அதன் பின், சுத்தமான நீரால் துடைத்து சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

சாய்பாபாவிற்குப் பிடித்த மஞ்சள் நிறம் கொண்ட மலர்கள் அல்லது மலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவிக்க வேண்டும். பின், தீபம், ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி பூஜையிட்டு எதாவதொரு நெய்வேத்தியம் வைத்து வேண்டலாம். இது போல, பழங்கள், இனிப்புகள், கற்கண்டு போன்றவற்றையும் படையலாக வைத்து சாய்பாபாவை வேண்டலாம். அதன் பின், அவற்றை எல்லோருக்கும் கொடுத்து சாய்பாபாவை வேண்டிக் கொள்ளலாம்.

முடிந்தால், விரத நாள்களில் சாய்பாபா கோவிலுக்குச் சென்று அங்கு பூஜையில் கலந்து கொள்ளலாம். அப்படி செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே சாய்பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யலாம். மேலும், இந்த விரத நாள்களில் சாய்பாபாவை நினைத்து அவரின் விரத கதைகள், சாய் பாமாலை, சாய் பவானி போன்றவற்றை பக்தியுடன் சாய்பாபாவை வேண்டி படிப்பது சிறப்பை அளிக்கும்.

வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மேலும், விரதத்தின் போது பெண்கள் மாதவிலக்கு அல்லது இன்னும் பிற காரணங்களாலோ விரதம் தொடர முடியவில்லை என்றால், அதற்கு அடுத்த வியாழக்கிழமை நாள்களில் இருக்கும் விரதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 9 வியாழக்கிழமைகள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

விரதத்தை நிறைவு கொள்ளும் முறைகள்

இவ்வாறு தொடர்ந்து விரதம் இருந்து ஒன்பதாவது வியாழக்கிழமை அன்று ஐந்து ஏழைகளுக்குத் தங்களால் இயன்ற உணவு அளிக்க வேண்டும். நேரடியாக வழங்க முடியாதவர்கள், யார் மூலமாகவும் பணமாகவோ, உணவுப் பொருள்களைக் கொடுத்தோ ஏற்பாடு செய்யலாம்.

சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக, 9 ஆவது வியாழக்கிழமை அன்று சாய் விரத புத்தகங்களை நம் வீட்டில் அருகில் இருப்பவர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாம்.

புத்தகத்தைக் கொடுக்கும் போது, அதனை பூஜை அறையில் வைத்து பின் கொடுக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் படி, விரதம் இருந்தால், நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். பொறுமையோடு இருந்தால், வேண்டுவதை அனைத்தும் தருவார்.

The post வியாழக்கிழமை வழிபாடு: எண்ணிய காரியங்கள் நிறைவேற்றும் சாய்பாபா..!! appeared first on Dinakaran.

Related Stories: