நன்றி குங்குமம் ஆன்மிகம்
கோடைக் காலத்தை இளவேனில் என்றும் முதுவேனில் என்றும் இரண்டாகக் கூறுகிறது தமிழ். இக்காலத்தில் நூற்றில் தொண்ணூறு பேர் தினமும் வெயிலின் கடுமையைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை. ஆனாலும், இந்தக் கோடையை கொடை என்றுதான் சொல்ல வேண்டும். கோடைக்காலம் வரும்போதுதான் அனைவருக்கும் கொடையுள்ளம் மேம்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்குக்கூட தந்துதவுகிற பழக்கம் ஏற்படுகிறது. வெயிலினால் ஏற்படும் சூட்டைத் தணிப்பதாக, தண்ணீர்ச்சத்து மிகுந்த பழங்கள் கோடையில்தான் அதிகமாகக் கிடைக்கின்றன.
மனிதர்கள்கூட இந்தக் கோடைக்காலத்தின்போதுதான் தண்ணீர்ப் பந்தல் வைத்தல், நீர்மோர்ப் பந்தல் வைத்தல், வீட்டு வாசலில் பானையில் நீர்வைத்தல் போன்ற அறங்களை முன்னெடுக்கிறார்கள். தாகத்தை தீர்க்க தண்ணீரால் மட்டுமே முழுமையாக முடியும்.திங்களூர் என்ற ஊரில் திருநாவுக்கரசரின் பெயரால் அப்பூதியடிகளார் என்பவர் தண்ணீர்ப்பந்தல் வைத்தார். அன்று, அதாவது ஏழாம் நூற்றாண்டில் அவர்வைத்த தண்ணீர்ப்பந்தல் இன்று வரைக்கும் நிலைபெற்று இருக்கிறது.
அதற்கொரு காரணமுண்டு. அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை. அவருடைய பெயரையும் பெருமையையும் மட்டுமே தெரிந்து வைத்திருந்தார். தான் செய்த அத்தனை அறங்களையும் திருநாவுக்கரசரின் பெயரிலேயே செய்தார். ஏன்? தன் வீட்டிலுள்ள பொருட்கள், மனிதர்கள் என எங்கும் நாவுக்கரசு என்ற நாமமயம்தான். ஒருநாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருகிறார். தன் பெயரால் அமைந்த பல அறச்சாலைகளையும் கண்டு அதிசயிக்கிறார்.
குறிப்பாக, தண்ணீர்ப்பந்தலுக்குச் சென்று அங்குள்ள பணியாளர்களிடம், “இப்பந்தர் இப்பெயரிட்டு இங்கு அமைத்தார் யார்’’என வினவ, அவர்கள் முறையான பதிலைச் சொல்கிறார்கள். “துன்றிய நூல்மார்பர் இத்தொல்பதியார் மனையின்கண் சென்றனர்; அதுவும் சேய்த்தன்று நனிந்து என்றார்’’ அதாவது, நூலணிந்த அந்தணர்; இப்பழமையான ஊரைச்சார்ந்தவர்: தற்போதுதான் வீட்டுக்குச் சென்றார். அந்த வீடும் தூரத்தில் இல்லை; மிகவும் அருகிலேயேதான் அமைந்துள்ளது என்கிறார்கள்.
எவ்வளவு விரிவான பதில்! தண்ணீர்ப்பந்தலில் வேலை செய்யும் ஆட்களும்கூட தண்ணீரைப் போலவே குளிர்ச்சி பொருத்திய மனநிலை உடையவர்களாக இருத்தல் வேண்டும். ஆம், கோபப்பட்டு கடுஞ்சொல் பேசுபவர்கள் இருந்தால், அவர்களால் உஷ்ணம் அதிகரிக்குமே தவிர, தண்மை தவழாது. என்பதை அப்பூதியடிகளார் தெரிந்து வைத்திருந்தார். தெரிந்து அத்தகைய குளிர்ச்சி பொருந்தியவர்களையே வேலைக்கும் வைத்திருந்தார் என்பதைப் புராணம் சொல்கிறது.
பின், அப்பூதியடிகளாரைச் சந்தித்த திருநாவுக்கரசர், “இந்த தண்ணீர்ப்பந்தலை, ஏன் எனது பெயரில் அமைத்தீர்கள்? என்று கேட்கவில்லை. “ஏன் தங்களின் பெயரில் அமைக்கவில்லை?’’ என்று கேட்டார், இதனை,
`ஆறணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த
ஈறில் பெரும் தண்ணீர்ப் பந்தரில் நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுதக் காரணம் என்கொல்?
கூறும்” என மொழித்தார் கோதின்மொழிக் கொற்றவனார்’
என்று சேக்கிழார் பதிவு செய்கிறார்.
அப்போது, திருநாவுக்கரசரை, “வேறொருபேர்” என்று சொன்னதும் அப்பூதியடிகளாருக்கு மடையுடைத்த வெள்ளம்போல் கோபம் கொப்பளித்து வருகிறது. “அவருடைய பெருமை என்ன வென்று தெரியுமா?’’ என்று கொதித்துவிடுகிறார். அப்போது திருநாவுக்கரசர் தனது பெருமை களைச் சொல்லி, `நான்தான் அந்தத் திருநாவுக்கரசர்’ என்று அறிமுகம் செய்து கொள்ளாமல், தனது குறைகளைச் சொல்லி குளிர்ச்சியாக அறிமுகம் செய்து கொள்கிறார். ஒரு தண்ணீர்ப்பந்தலுக்குக் கூட குளிர்ச்சியான மனநிலை உடையவருடைய பெயரையே அப்பூதியடிகளார் சூட்டியிருக்கிறார். அதனால்தான் நாவுக்கரசரின் பெயர் இன்றும் இருப்பதைப்போல் அந்த தண்ணீர்ப்பந்தலும் இன்றும் இருந்துவருகிறது.
தண்ணீர்ப்பந்தலை மழைக்காலத்திலா வைக்கமுடியும்? கோடையில்தான் முடியும். ஆகவே கோடைக்காலம்தான் கொடை மனத்தை உருவாக்கும் காலம் எனலாம். வடலூர் வள்ளற்பெருமான் கோடைக்காலத்தின் சூழ்நிலையை ஒரு பாடலில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே’’
என்ற பாடலில், கோடைக்காலம், சுரீல் என்று அடிக்கும் வெயிலில் வெகுதூரத்திலிருந்து ஒருவர் நடந்து வருகிறார். இளைப்பாற எங்கும் நிழல் இல்லாத சூழலில் திடீரென ஒருமரம் தென்படுகிறது. கண்டதும் மனம் மகிழ்கிறது. அந்த மரத்தடிக்குச் சென்றதும் உடலில் உள்ள உஷ்ணம் தணிகிறது. காரணம் மரத்தடி நிழல் குளிர்ச்சியாக இருக்கிறது. `தாழாத பசியாக இருக்கிறதே’ என்று நினைக்கும்போதே மரத்தில் தாழ்வாக ஒரு கனி கனிந்து உண்ணத் தயாராக இருக்கிறது. பறித்து உண்டதும் `பருக நீர்வேண்டுமே’ என்று எண்ணும்முன் எட்டும் தூரத்தில் சுவைநீர் சுரக்கும் சுனை ஒன்று தென்படுகிறது.
அங்கு சென்றால் நீரும் கிடைக்கிறது. கண்ணுக்கும் மூக்குக்கும் விருந்து படைக்கும் வகையில் அங்கு தாமரை மலரும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கோடையைத் தன் பாட்டின் மூலம் இறைவனின் கொடையாக்கிக் காட்டுகிறார் வள்ளலார். இக்கோடையில்தான் பல கோயில்களில் திருவிழாக்கள் செய்து இறைவனுக்கு சந்தனம் முதலிய குளிர்ச்சியான பொருட்களை அபிஷேகம் செய்வர். நீராட்டல் செய்ய தீர்த்தவாரி நடத்துவர். அப்போது அனைவரும் சேர்ந்து “கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்’’ என்ற ஆண்டாளின் அடிக்கு இணங்க குளித்துக் கொண்டாடுவர். இந்த கோடையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் ஒருநாளில் மதுரை கள்ளழ கருக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.
கொங்குநாட்டில் சில விநாயகர் கோயில்களில் சுவாமி சிலைக்கு மேலே பானை நிறுத்தி, அதில் முழுக்க நீர் நிறைத்து சிறுதுளை அமைத்து, அதிலிருந்து வழிந்துவரும் நீர் இறைவன் மீது விழுமாறு செய்கின்றனர். இக்கோடையில் வரும் தெலுங்கு வருடப்பிறப்பின் போது செய்யப்படும் பட்சணத்தில் வேப்பம்பூவும் சேர்க்கப்படுகிறது. இது வெப்பத்தினால் பரவும் அம்மை உள்ளிட்ட நோய்களைக் கட்டுக்குள் வைக்கிறது. உண்மையிலேயே கோடைதான் இறைவனின் கொடை. நிலையாமையை நினைவூட்டு கிறது. மற்றவர்களுக்கும் வழங்க வேண்டு என்ற எண்ணத்தையும் எழச்செய்கிறது.
தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்
The post கோடை இறைவனின் கொடை appeared first on Dinakaran.