சாலை விபத்துகளில் 879 பேர் சாவு

கிருஷ்ணகிரி, ஜூன் 1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 16 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 879 பேர் பலியாகியுள்ளனர். சாலை விதிகளை மீறுவதால் ஆண்டுதோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கிறது. இந்த மாவட்டத்தின் வழியாக, கன்னியாகுமரி -காஷ்மீர், கிருஷ்ணகிரி -சென்னை, கிருஷ்ணகிரி -பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி -குப்பம் (ஆந்திரா), ஓசூர் -சர்ஜாபூர் (கர்நாடகா) ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக தான் செல்கிறது. நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளில் செல்லும் வாகனங்கள், பெரும்பாலும் 100 கி.மீ வேகத்திற்கு குறையாமல் செல்கிறது. இந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மீது கனரக வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை, அதாவது 16 மாதங்களில் இம்மாவட்டத்தில் நடந்த 820 விபத்துகளில் 879 பேர் பலியாகியுள்ளனர். 2553 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலர் கை, கால்கள் இழந்து, நடக்க முடியாமல் உள்ளனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப, விபத்துகளும் அதிகமாகிறது. அரசு போக்குவரத்துத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய போதும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையவில்லை. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதாலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும், அதிக அளவில் விபத்துகள் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போலுப்பள்ளி என்ற இடத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் விபத்துகளால், உயிரிழப்புகள் நிகழ்வதை தடுக்க முடியவில்லை. மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு, உயர்கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி வந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 367 பேரும், 2020ம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 576 பேரும், 2021ம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 589 பேரும், 2022ம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 632 பேரும், இவ்வாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாத இறுதி வரை நிகழ்ந்த விபத்துகளில் 247 பேரும் உயிரிழந்துள்ளனர். சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல், காற்றில் பறக்க விடுவதால், ஆண்டு தோறும் விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை கடைபிடிப்பதின் மூலம் மட்டுமே, விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.ஓசூர் மாநகராட்சியில் பணிகள் நடப்பதில்லை.

The post சாலை விபத்துகளில் 879 பேர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: