ஆமூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் எடுப்பதால் பொக்லைன், லாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: மணல் எடுப்பதை நிறுத்தி டிஎஸ்பி நடவடிக்கை

பொன்னேரி, ஜூன் 1: ஆமூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு சவுடு மண் எடுக்கப்படுவதால் பொதுமக்கள் லாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி அருகே ஆமூர் கிராமம் உள்ளது. இங்கு, சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆமூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்துதான் குடிநீருக்காக பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆமூர் ஏரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. இங்கு சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400 அடி சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, இப்பகுதியில் உள்ள அரசு அனுமதி பெற்று ஏரியில் சவுடு மண் எடுக்கப்பட்டும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு அனுமதியின்றி மூன்று அடி என்னும் அளவைவிட சுமார் 20 அடிக்கும் மேலாக சவுடு மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, பொதுமக்கள் சவுண்டு மணல் எடுக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு, இரண்டு பொக்லைன் இயந்திரம் மற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகளை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏரியில் நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி டிஎஸ்பி கிரியாசக்தி (பொறுப்பு) மற்றும் பொன்னேரி வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக் கொள்ளாததால் சவுடு மணல் எடுக்கும் லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் அப்புறப்படுத்தினர். இனிமேல் சவுடு மணல் எடுக்கக் கூடாது அரசு அனுமதித்த அளவு மட்டும் எடுக்க வேண்டும் என லாரி டிரைவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, மணல் எடுப்பது நிறுத்தப்பட்டது. பின்னர், சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்த பின் மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post ஆமூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் எடுப்பதால் பொக்லைன், லாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: மணல் எடுப்பதை நிறுத்தி டிஎஸ்பி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: