2023 மே 31ம் தேதி வரையான வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.12 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

சென்னை: தமிழகத்தில் 2023ம் ஆண்டு மே 31ம் தேதி வரையிலான வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1ல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. 01.04.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 5.1.2023ம் தேதியில் இருந்து பெறப்பட்டது.

2023ம் ஆண்டில், காலாண்டு வரை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,23,064 பேர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 51,295 வாக்காளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு முகவரி மாற்றம் செய்துள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும் 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய தேதிபடி (31.5.2023) வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் (ஆண்கள் 3,01,18,904 பேர், பெண்கள் 3,11,09,813 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) உள்ளனர்.

மேலும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,26,253, பெண்கள் 3,24,713, மூன்றாம் பாலினத்தவர் 111). இதற்கு அடுத்தப்படியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,54,919 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,26,489, பெண்கள் 2,28,315, மூன்றாம் பாலினத்தவர் 115). தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது. இதன் மொத்த வாக்காளர்கள் 1,69,292 ஆவர். வாக்காளர் பட்டியலில் இதுவரை 4,34,583 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் குறிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612. வாக்காளர் பட்டியலினை, தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.

18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்
* 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம்.
* இணையம் மூலமாக https.//voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
* கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
* வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ. 100 வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post 2023 மே 31ம் தேதி வரையான வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.12 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: