பெண்ணிடம் ரூ. 45 லட்சத்தை பறித்து, கொலை மிரட்டல் பாஜ நிர்வாகியை காவலில் எடுக்க போலீஸ் முடிவு

சென்னை: பெண்ணிடம் ரூ. 45 லட்சத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வில்லிவாக்கம் 9வது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்தப் புகாரில், எனது பூர்வீக சொத்து கொரட்டூர் அருகே 78 சென்ட் உள்ளது. அந்த நிலத்தை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜை அணுகினேன், சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தது.

அதை தீர்த்து வைப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பா.ஜ. நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் (51) என்பவரை அணுகினோம். இந்நிலையில் சென்ற மாதம் வேறு ஒருவர் மூலம் சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்டது. அதை தெரிந்து கொண்ட ரமேஷ் தனது கூட்டாளி நாகர்கோவில் மகேஷ் (47) என்பவருடன் வீட்டிற்கு வந்து எனது கைப்பையில் இருந்த ரூ. 45 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாராயணி கூறியிருந்தார்.

இதேபோல, தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18ம் தேதி கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார், அதில் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் நேரில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். இந்த 2 புகாரின் பேரில் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் தனித்தனியாக இரண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேசை கைது செய்தனர். மின்ட் ரமேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை மதுரவாயலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷ் மீது தலா இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மேலும் பலரை இதுபோல மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அம்பத்தூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post பெண்ணிடம் ரூ. 45 லட்சத்தை பறித்து, கொலை மிரட்டல் பாஜ நிர்வாகியை காவலில் எடுக்க போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: