உரிமை மல்யுத்தம்

ராணுவம், காவல்துறைக்கு அடுத்தபடியாக மக்களிடையே தேசப்பற்றை உணர்வுரீதியாக வெளிப்படுத்தும் ஒரு துறை விளையாட்டு. இளம்வயதில் இருந்தே வீரர்களும், வீராங்கனைகளும், தங்களது நேரத்தை பிற பொழுதுபோக்கு அம்சங்களுக்காக செலவிடாமல், விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற ஆவலில் தீவிரமாக பயிற்சி செய்து நாட்டுக்காக பெருமை சேர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களை கொண்டாட வேண்டிய ஒன்றிய அரசு, கங்கை ஆறு போல கண்ணீர் விட விட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் தங்களுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த ஜனவரி மாதமே, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டத்தின் விளைவாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான குழு வீராங்கனைகளிடம் விசாரணை நடத்தியது.

ஆனாலும், பாஜவை சேர்ந்த எம்பி மீதான குற்றச்சாட்டு என்பதால், ஒன்றிய அரசு இந்த பிரச்னையை மூடி மறைக்கவே பார்த்தது. புகாரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே, பாஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தங்களது குற்றச்சாட்டு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய நியாயம் வழங்கக் கோரி, கடந்த மே 28ம் தேதி திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி வீராங்கனைகள் முற்றுகையிட சென்றனர்.

இவர்களை போலீசார் தடுத்து, வலுக்கட்டாயமாக, தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லி போலீசாரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை போராட்டம் நடத்தப் போவதாகவும், ஒலிம்பிக் உட்பட பல விதமான போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசி எறியப்போவதாகவும் அறிவித்து வீராங்கனைகள் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கமும் குரல் கொடுத்தது பாராட்டுக்குரிய ஒன்று.

கங்கை கரைக்கு வந்த வீராங்கனைகளிடமிருந்து பதக்கங்களை பெற்ற பாரதிய கிஷான் சங்கம் மற்றும் சம்யுக்தா கிசான் மோச்சா விவசாயிகள் அமைப்புகள், இப்பிரச்னைக்காக நாடு தழுவிய போராட்டத்தில் இறங்குவோம். ஒன்றிய அரசுக்கு 5 நாள் கெடு விதிப்போம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கங்கையில் பதக்கங்களை வீசுவோம். விவசாயிகள் போராட்டம் போல, தேசிய அளவில் கொண்டு செல்வோம் எனக்கூறியது ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மல்யுத்தம் என்பது தன்னை எதிர்கொள்ளும் பலசாலியை, உடல் பலம், மனபலத்தை வெளிப்படுத்தி களத்தில் வீழ்த்துவதாகும். ஆனால், இங்கு மல்யுத்த வீராங்கனைகள் அரசுக்கு எதிராக ‘உரிமை மல்யுத்தம்’ செய்வது சங்கடத்தை தருகிறது. ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த தேசத்தின் மகள்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகும்.

The post உரிமை மல்யுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: