தினமும் போக்குவரத்து நெருக்கடி; ஆக்கிரமிப்பின்பிடியில் அருப்புக்கோட்டை சாலை: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அண்ணாசிலை பகுதி, காசுக்கடை பஜார், மதுரைரோடு, புதுக்கடை பஜார், தங்கச்சாலை தெரு, போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அண்ணாசிலை பகுதியில் நடைபாதை கடை சாலையின் இருபுறமும் வைத்திருப்பதால் தினம் தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களை நடைபாதையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்துசெல்ல முடியாமல் ஆக்கிரமிப்பால் குறுகலான அண்ணா சிலை பகுதியில் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சுழி, கமுதி, விளாத்திக்குளம், மற்றும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் அண்ணாசிலை பகுதியை கடந்து செல்வதற்குள் நெரிசலால் சிரமப்படுகின்றன. மேலும் புதுக்கடை பஜாரில் வாறுகாலை ஆக்கிரமித்து பூக்கடைகளை வைத்துள்ளனர்.

கடைகளில் உள்ள கழிவுகளை வாறுகாலில் கொட்டுவதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீரும் கழிவுநீரும் கலந்து அந்தப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. தங்கச்சாலை தெருவில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு சரக்கு லாரிகள் வந்து சென்றது. தற்போது கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத அளவிற்கு பாதை குறுகலாகிவிட்டது. கடந்த சில வருடங்களாக நகராட்சி நகரமைப்பு பிரிவும், நெடுஞ்சாலைத் துறையும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறையில் ஆக்கிரமிப்பு குறித்து கேட்டால் வருவாய்த்துறைக்கு நகரில் ஆக்கிரமிப்புக்கு சர்வேயர்கள் மூலம் இடத்தை அளவீடு செய்துதர கூறியுள்ளோம்.

அளவீடு செய்து கொடுத்தவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நகரில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விரைந்து அளவீடு செய்து தர வேண்டும். வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தினமும் போக்குவரத்து நெருக்கடி; ஆக்கிரமிப்பின்பிடியில் அருப்புக்கோட்டை சாலை: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: