ஆன்மீகம் பிட்ஸ்: படவேடு ரேணுகாம்பாள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கண்ணூர்பட்டி – ஆதி பராசக்தி

ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில், தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாள் ஆதி பராசக்தியின் அம்சமாகும். இந்த அம்பாளுக்கு ‘ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி’ என்றும் ‘ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி’ என்றும் பெயர்கள்.

ஆனால், வழக்கில் அனைவரும் அன்னையை ‘ஸ்ரீபெரியாண்டவர்’ என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் ஆதிபராசக்தி கடும் உக்ரமும் மஹாகோபமும் பொருந்தியவளாய் விளங்குகிறாள். தீயசக்திகளை நாசமாக்கிவிடும் பெரும் சக்திகொண்ட தெய்வீக யந்திரங்கள் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. வேறேங்குமே இம்மாதிரி அமைப்பும், தெய்வீக சக்தியும் கொண்ட கோயில் கிடையாது, என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

படவேடு-ரேணுகாம்பாள்

ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி அன்னையின் சிரசைக் கொண்டு வந்தார் பரசுராமர். சொன்னதை செய்த உனக்கு என்ன வேண்டுமென்று தந்தை ஜமதக்னி முனி பரசுராமரை கேட்டார். என்னை பெற்றவளையே திருப்பிக் கேட்கிறேன் என்று தீர்க்கமாக சொன்னார், பரசுராமர். தலையையும் உடலையும் கொண்டு வா உயிர்ப்பித்துத் தருகிறேன் என்றார், ஜமதக்னி முனிவர். அப்படி அவர் கொண்டு வந்த உடலை நீர்தெளித்து சேர்த்து ஒளியில் பார்க்க தலைக்குரிய உடல் மாறியிருந்தது. ஆனால் அவளே ரேணுகாம்பாள் என்று மகாசக்தியாக மலர்ந்தாள். அவளே படவேடு எனும் தலத்தில் அமர்ந்தாள். துயர் எனும் சொல் இனி உங்கள் வாழ்வில் இல்லை என்று திடமாக பக்தர்களுக்காக அமர்ந்திருக்கிறாள்.

படவேட்டிலுள்ள இத்தலத்தைச் சுற்றிலும் நிறைய ஆலயங்கள் உள்ளன. காளி கோயில்களும் நிறைந்திருக்கின்றன. சக்தியின் வீச்சு மிகுந்த தலத்தில் தலையாய தலமாகவும் இது விளக்குகிறது. சம்புவராயர்கள் படவேடுவை கோயில் நகரமாகவே உருவாக்கினார்கள். ஆரணிக்கும் வேலூருக்கு இடையில் மலைகளுக்கு நடுவே படவேடு கோயில்கள் அமைந்துள்ளன.

சென்னை – ஸ்ரீகாளிகாம்பாள்

சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம். திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகிவிடுவார்கள். என்ற நம்பிக்கை உள்ளது. காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீவிஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர். காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் ‘சொர்ணபுரி’ என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர். காஞ்சி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மிகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

மத்தூர் – ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம்தான் மகிஷாசுரமர்த்தினி. பல்வேறு தலங்களில் அருளும் இந்த அன்னை, மத்தூரிலும் விளங்குகிறாள். ரயில் பாதைக்காக தோண்டிய பள்ளத்திலிருந்து வெளிப்பட்ட பெரிய, அழகு சிற்ப வடிவினள். அஷ்டபுஜங்களோடு எந்தச் சிதைவுமின்றி ஏழடி உயர எழிற்கோலம்! எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் திருமுகம் மட்டும் சாந்தமாக ஜொலிக்கிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமியன்று 108 பால்குட அபிஷேகமும் சிறப்புப் பூஜைகளும் உண்டு. திருத்தணி – திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு அருகே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: அருள்ஜோதி

The post ஆன்மீகம் பிட்ஸ்: படவேடு ரேணுகாம்பாள் appeared first on Dinakaran.

Related Stories: