லலிதா சஹஸ்ரநாமத்தை அகத்தியருக்கு உபதேசித்த ஹயக்ரீவ பெருமாள்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 2

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

அந்த மாபெரும் சமுத்திரம் முழுவதும் அம்ருதத்தால் நிரம்பி இருந்தது. சமுத்திரம் நீராலானது. ஆனால், இங்கு அம்ருதமே இருந்தது. அது கூடவும் இல்லை. குறையவும் இல்லை. அது அநாதியாக கிடந்தது. காலங் கடந்து அலைகளற்றிருந்தது. அலை எனும் மரணம் வந்து கரைகளை முட்டித் தொடவில்லை. அங்கு கரைகளே இல்லை. கரைகளற்று இப்படியொரு சமுத்திரமா என ரிஷிகள் ஆச்சரியத்தோடு தரிசித்தனர்.

ம்ருத்யு என்கிற மரணத்தை அழித்து அம்ருத்யு என்கிற மரணமற்ற தன்னுள் தளும்பத் தளும்ப வைத்திருந்தது. அதன் மையத்தே கற்பக விருட்சங்கள் நட்சத்திரங்கள் போல ஒளி சூழ்ந்து ஒளிர்ந்திருந்தன. கோடானுகோடி ஜீவர்களின் மனோரதங்கள் எனும் ஆசைகள் அந்த மரத்தினடியில் விழுந்து எழுந்து கனியாகி தன்னுள் ஆசையை நிறைவேறப் பெற்று எங்கோ பயணப்பட்டபடி இருந்தன. ஜீவனுக்குள் சூட்சுமமாக சென்றன.

அதையும் தாண்டி, கடம்ப மரங்கள் அடர்த்தியாக செழித்து வளர்ந்திருந்தன. அதையும் கடந்து வைரங்கள் பதிக்கப்பட்ட, உலோகங்களாலும் ரத்னங்களாலும் இழைக்கப்பட்ட இருபத்தைந்து கோட்டைகளுக்கு மத்தியில் சிந்தாமணி என்ற வீடு இருந்தது. அந்தச் சிந்தாமணி எனும் வீடு மந்திரத்தின் ஆணி வேரான பீஜாட்சரங்களால் தொடர்ந்து அதிர்ந்தபடி இருந்தன. அந்த இல்லமே மந்திரங்கள் சூழ்ந்து ஒலித்தபடி இருந்தது. ஆஹா…. இதற்குப் பெயர்தான் ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீநகரமா என்று முனிபுங்கவர்கள் தரிசித்தபடி இருந்தார்கள்.

இவை அனைத்தும் மனம் புத்தி அந்தக்கரணம் என்று யாவற்றையும் தாண்டி இருந்தது. ஐம்புலன்களாலும் விவரிக்க முடியாததாக இருந்ததால் அந்த பேரழகை வெளிப்படுத்த இயலாத அவஸ்தையில் ரிஷிகள் இருந்தனர். அந்த ஸ்ரீபுரத்தின் மத்தியில் பெரும் ஆசனம் போடப்பட்டிருந்தது. அந்த ஆசனத்திற்கு பஞ்ச பிரம்ம ஆசனம் என்று பெயர். அந்த ஆசனத்தை தூல கண்களாலோ அல்லது மனம் கொண்டு பார்க்க இயலாது. மனம் தாண்டிய நிலையில் எண்ணமற்ற நிலையில் பூவுலக அனுபவத்தைத் தாண்டிய ஆசனமாகத் திகழ்ந்தது.

அந்தப் பஞ்ச பிரம்மங்கள் என்றழைக்கப்படும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகிய இந்த நால்வரும் நான்கு கால்களாக இருந்தனர். சதாசிவம் என்கிற நிலையில் இருக்கும் சிவம் மேல் பலகையாகவும் அப்பேற்பட்ட கட்டிலில் அம்பாள் காமேஸ்வரரோடு அமர்ந்திருந்தாள். இவர்கள் ஐவரும் சிருஷ்டி என்கிற படைத்தலையும், ஸ்திதி என்கிற நிலைநிறுத்தி பரிபாலித்தலையும், சம்ஹாரம் என்கிற அழித்தலையும், திரோதனம் என்கிற மறைத்தலையும், அனுக்கிரகம் என்கிற அருளுதலையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

சதா தேவியின் தியானத்தில் கண்மூடி தன்னுள் ஆழ்ந்து கிடப்பதையே இங்கு கட்டிலின் கால்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. பிரம்மமான அம்பிகைக்குள் தோன்றியதாலும், பிரம்மத்திலேயே ஒடுங்குவதாலும் இவர்களும் பிரம்மமே ஆவர். தேவி இவர்களின் ஒட்டுமொத்த சக்தியையும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்வதால் இவர்களுக்கு பஞ்ச ப்ரேதர் எனும் நாமமும் உண்டு.

அப்பேற்பட்ட லலிதா திரிபுரசுந்தரியான அம்பாள் இந்த ஜீவன்கள் உய்வுற வேண்டி மாபெரும் கருணை கொண்டாள். அவளின் திருக்கண்கள் அருகேயிருந்த வாக்தேவிகளின் மீது படர்ந்தது. முதலில் வசினீ என்பவளின் மீது தம் பார்வையை பதித்தாள். மெல்ல விழிகளை காமேஸ்வரி, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, சர்வேஸ்வரி, கௌலினீ என்று தொடர்ந்து அனுக்கிரகித்தாள். மெல்ல உதடு பிரித்து பேசத் தொடங்கினாள். அம்மையின் குரலின் இனிமை சரஸ்வதியை மயக்கியது.

மெல்ல, தன் வீணையை தூக்கி அப்பால் வைத்தாள். இதென்ன.. இத்தனை இனிமை என கண்மூடி குரலின் திக்கு நோக்கி திரும்பினாள். ‘‘சொல்வன்மையில் சிறந்தவர்களே. என்னுள்ளே நான் சொல்லென உதிர்ப்பதை உங்களுக்குள் வாக்வன்மையாக்கி நிறைப்பவர்களே. நீங்கள் அனைவரும் என்னுடைய ஸ்ரீசக்ரத்தின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள். எப்போதும் என் நாமங்களை சிரத்தையோடு சொல்லியபடி இருப்பீர்கள். இப்போது என்னைப்பற்றிய புதிய ஸ்தோத்திரத்தைப்பற்றி கூறும்படி கட்டளையிடுகின்றேன்.

அது என்னுள்ளிருந்து உங்களுக்காக பூரித்து வரும். அந்த ஸ்தோத்திர நாமங்கள் அனைத்தும் நானே. நான் என அகிலமாகி நின்ற நானுக்கும் அந்த நாமங்களுக்கும் பேதமென்று ஒன்றில்லை. நானும் அந்த ஸ்தோத்திர நாமங்களும் அபேதமாக இருக்கின்றோம். நீங்கள் அனைவரும் சொல்லும் இந்த ஸ்தோத்திரம் என்னுடைய பெயரையே முத்திரையாக கொண்டிருக்கும். இந்த ஆயிரம் நாமங்களுள் லலிதா என்பதே என்னுடைய சிறந்த நாமமாகும். இது என்னுடைய அசாதாரணமான வாக்கு, மனம் எதனாலும் தொடமுடியாத நிலையைக் குறிக்கின்றது.

எனவே, இந்த சகஸ்ரநாம பூரணத்திற்கு லலிதா சகஸ்ரநாமமென்று பெயர்’’ என்று சொன்ன மாத்திரத்தில் ஆயிரம் நாமங்களும் வாக் தேவிகளுக்குள் பொங்கி பிரவகிக்கத் தொடங்கியது. பூரண பிரம்மம் ஆயிரம் நாமங்களுக்குள்ளும் வந்தமர்ந்தது. வாக்தேவிகள் நாமங்களை எடுத்துச் சொல்லத் தொடங்கினர்.
வசின்யாதி வாக் தேவதைகள் உணர்ந்ததை காலாதீதமான நிலையிலிருந்த விஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவரின் ஹ்ருதயத்திலும் பூத்தது. மலர்ந்தது. ஹயக்ரீவப் பெருமான் சரியாக லலிதா சஹஸ்ரநாமத்தை தன் சீடரான அகஸ்தியருக்கு உபதேசிக்க ஆவல் கொண்டார்.

அகஸ்தியர் கைகளை கூப்பிக் கொண்டார். ‘‘ஹே… அஸ்வானன (குதிரை முகமுடைய) என்றழைக்கப்படும் ஹயக்ரீவப் பெருமானே… என் குருநாதா. சர்வ சாஸ்திரங்களையும் ஆதிசக்தியான லலிதா மகாதிரிபுரசுந்தரியிடமிருந்து பெற்றவரே. உங்களாலேயே நான் லலிதா என்கிற பொருளை அறிந்தேன். எப்போதும் லீலையான விளையாட்டுகளை விளையாடுபவள் என்று புரிந்து கொண்டேன். உங்களாலேயே பண்டாசுரனை அம்பிகை வதம் செய்த மாபெரும் தத்துவக் காதையை அறிந்தேன். லலிதா உபாக்கியானத்தின் முக்கிய கண்டங்களான, மந்திர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரகஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் என்று பிரித்துப் பிரித்து அழகாக விளக்கினீர்கள்.’’

‘‘ஆமாம். அகஸ்தியா… நீ மட்டும் சாதாரணனா.. யோகிகளுக்கெல்லாம் யோகியாக கும்ப எனும் ரகசிய யோக தத்துவத்தின் சிகரம் ஏறி நிற்பவனல்லவா. உனக்கு என்னிடம் என்ன கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ தாராளமாக கேள்.’’

‘‘ அதுவல்ல குருநாதா… எல்லாவற்றையும் கூறினீர்கள். ஆனால், லலிதா தேவியின் சஹஸ்ரநாமம் என்று ஒன்று இருப்பதை ஏன் எனக்கு கூறவில்லை. நீங்கள் ஏன் எனக்கு கூறவில்லை என்று நான் சில விஷயங்களை நினைக்கின்றேன். எதையும் மறக்காத நீங்கள் எனக்கு சொல்ல வேண்டுமென்பதை மறந்து விட்டீர்களா. எதற்குச் சொல்ல வேண்டுமென்கிற மெல்லிய ஒதுக்கம் என்னிடம் தாங்களுக்கு வந்து விட்டதா. அல்லது சகஸ்ரநாமத்தைக் கேட்கும் தகுதியும் பக்குவமும் எனக்கு இல்லையா. இதையும் தாண்டி எனக்கு அதைச் சொல்லாததன் காரணத்தை கூறுங்கள்’’ என்று கவலையும் ஆற்றாமையும் கலந்த உணர்வை கேள்வியாகக் கேட்டு தலை குனிந்தார்.

ஹயக்ரீவர் மெல்ல அருகே நகர்ந்தார். அகத்தியரின் ஜடா பாரத்தின் மீது ஆசியளிப்பதுபோல் கரம் பதித்தார். மெல்ல முகவாய் தூக்கி கண்களால் கருணை பெய்து தோள் தொட்டார்.

‘‘கேட்காத சீடனுக்கு எப்போதும் ஒரு குரு போதிப்பதில்லை என்பதை நீ அறிவாயல்லவா. பக்தியில்லாதவனுக்கு உபதேசம் செய்தால் அது வெற்றுப் பேச்சாய் போய்விடு அபாயம் இருப்பதையும் நீ அறிவாய் அல்லவா. அம்பாளின் மான்மியத்தையும் சஹஸ்ரநாமங்களின் ரகசியங்களையும் அறியும் பேராவலையும் உன்னிடத்தில் நான் இப்போது காண்கின்றேன். அகத்தியா… இது ரகசியத்திற்குள்ளும் ரகசியமானது.

அதனாலேயே சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். என் சொற்களை வாங்கி நெஞ்சுக்குள் இருத்தி தியானிக்கும் நிலை உன்னிடத்தில் எப்போதும் இருப்பதை நான் அறிவேன். ஆனால், இந்த சஹஸ்ரநாமமோ ரகசியத்திலும் ரகசியமானது. நீ அறிந்து கொண்டே ஆகவேண்டுமென அம்பாள் உன்னுள் அமர்ந்து தாபத்தை ஏற்படுத்துவதை காண்கிறேன்’’ என்று ஹயக்ரீவர் சொன்னபோது அகஸ்தியர் கண்களில் ஒளி வீசி அடங்கியது.

‘‘ ஆஹா… ஆஹா… அதன் மகிமையை விவரித்துச் சொல்லுங்கள்’’ என்று மாபெரும் நதியின் போக்கில் செல்லும் படகுபோல ஹயக்ரீவரின் முன்பு முற்றிலும் தன்னை இழந்து நின்றார்.

‘‘அகத்தியரே…. இருக்கும் தந்திர சாஸ்திரங்களிலேயே சட்டென்று சித்தியைக் கொடுக்கும் சகஸ்ரநாமங்களில் லலிதா சகஸ்ரநாமமே தலை சிறந்தது. இவற்றுள் முக்கிய நாமங்களான கங்கா, காயத்ரீ, சியாமளா, லட்சுமி, காளி, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, பவானி என்று பத்து நாமங்கள் உள்ளன. அவற்றுள் லலிதா எனும் நாமமே சிரேஷ்டம் வாய்ந்தது. இதோ அந்த நாமமான லலிதா.. லலிதா… என்று குரல் வெளியே கேட்க சத்தமாகச் சொல் பார்க்கலாம். பிறகு, குரலை வெளிவிடாமல் வெறும் நாவால் இந்த நாமாவை புரட்டி யாருக்கும் தெரியாமல் சொல்.

மூன்றாவதாக அந்த நாமத்தை மனதிலிருந்து எண்ணம்போல எழுப்பி சொல்லிக் கொண்டே இரு பார்க்கலாம்’’ என்று சில கணங்கள் காத்திருந்தவாறு அகத்தியரை பார்த்தார். தீ போன்ற அந்த நாமம் வாக்காக வெளிப்பட்டது. நா புரள எழுந்தது. பின்னர் மனமே அந்தச் சொல்லாய் மாறி எழுந்து நின்றதும் சட்டென்று மனம் எனும் மாயை அறுந்து அந்த நாமத்திற்குள் விளங்கும் பிரம்மமாக லலிதா எழுந்தாள். அகத்தியர் கண்கள் மூடி தரிசித்தார். மெல்ல கண் திறந்தார்.

‘‘இதோ பாரப்பா… இந்த லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினால் சந்தோஷம் அடையும் அளவிற்கு வேறு எந்த சகஸ்ரநாம பாராயணத்தினாலும் ப்ரீதி அடைவதில்லை. மேலும், சரீரத்தில் உயிர் உள்ளவரை சொல்லும் ஜீவன் இன்னொரு உடல் எடுப்பதில்லை. மந்திரங்களுக்குள் எது உயர்ந்தது என்று சொல் பார்க்கலாம்’’

‘‘ மிக நிச்சயாமாக ஸ்ரீவித்யையே குருநாதா…’’

‘‘சரியானதுதான்… அதிலும் காதி வித்யையான அதி சூட்சுமமான பிரம்ம வித்யை எப்படி சிறந்ததோ அந்த அளவிற்கு இதுவும் சிறந்தது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் சிவபெருமான் எப்படி உயர்ந்தவரோ, தேவி வசிக்கும் ஸ்ரீபுரம் எப்படி உயர்ந்ததோ அதுபோல சகஸ்ரநாமங்களுக்குள் இதுவே உயர்ந்ததாகும். இந்த சகஸ்ர நாமங்களினால் ஸ்ரீசக்ரத்தில் தாமரைப் பூக்களாலும், துளசி தளங்களாலும், வில்வத்தாலும் அர்ச்சனை செய்தால் உடனே அனுக்கிரகம் செய்கின்றாள். ஸ்ரீசக்ர பூஜையில் துளசியும் வில்வமும் விலக்கப்பட்டது. ஆனால், இந்த லலிதா சகஸ்ரநாமத்தோடு செய்யப்படும் இந்த அர்ச்சனையை அம்பாள் பிரியத்தோடு ஏற்கிறாள்.

இன்னொன்று தெரியுமா. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. வெறும் பாராயணம் செய்ய முடியும் என்று பாராயணமாக இந்த நாமங்களை உச்சரித்தாலும் போது. அம்பாள் அந்த நாமங்களையே பல்லக்காக்கி மனதுக்குள் நுழைந்து ஜீவனுக்குள் நுழைகின்றாள். அம்பாளின் பக்தன் ஒருவன் ஒருமுறை சொன்னாலும் கூட அவன் விரும்பும் யாவற்றையும் அளித்து விடுகின்றாள். அவன் எனக்கு பிரியமானவன் ஆகின்றான் என்கிறாள்.

காம்யார்த்தமான அதாவது உலகாயாத விஷயங்கள் மட்டுமல்லாது, மோட்சத்தில் இச்சையை அளித்து அவனை தவத்தில் ருசியை கூட்டி பிரம்ம சம்மந்தம் உடையவளாக மாற்றுகின்றாள். இதை லலிதா தேவியே கட்டளையாக இட்டிருக்கின்றாள். அருளாணை பிறப்பித்திருக்கிறாள். அந்த ஆணையை ஏற்ற பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், மந்த்ரிணீ முதலிய சக்திகள் எப்போதும் சகஸ்ரநாமத்தை பக்தியுடன் சொல்லியபடி இருக்கின்றார்கள். ஆகவே, நான் ஒரு அம்பாளின் பக்தன் என்று நினைப்பவன் இந்த லலிதா சகஸ்ரநாமத்தை விடாது நித்தமும் பாராயணமாக சொல்லி வர வேண்டும்.

இதோ அங்கு இங்கு என அளவிடற்கரிய அந்த பிரம்ம வஸ்துவான லலிதா பரமேஸ்வரி ஆயிரம் நாமங்களில் எப்படி எப்படியெல்லாம் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்கிறேன். மிகமிக கவனமாக இந்த ஒவ்வொரு நாமத்தையும் கேள். செவி எனும் உறுப்பின் மூலம் மனதில் தேக்கு. அப்படி தேக்கியது உன் முயற்சியற்று உன் பாறை போன்ற, அலை அலையாக எழுந்து அடங்க மறுக்கும் மனதை எப்படி நிச்சலமான மாற்றுகின்றது என்பதை கவனி. ஒவ்வொரு நாமமும் எப்படி பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றாக மலர்ந்துள்ளது என்பதை தரிசி.

இனி அவளே அனைத்துமாக இருப்பது புரியும். இனி, அவளைத் தவிர இங்கு வேறு எவரும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரியும். நான், நீ, அவள், அவர், அது என்று எதுவுமற்று அவளே அனைத்துமாகி நின்று, நீயும் அவளாகவே இருப்பதும் புரியும். அப்போது உன்னுள் சரணாகதி தானே சித்திக்கும். அதற்குமேல் விளக்க எதுவுமில்லை’ என்று ஹயக்ரீவர் மௌனமானார். அந்த மௌனத்தில் அகத்தியர் தானும் கரைந்தார். அவ்விருவரையும் லலிதாவின் நாமங்கள் சூழ்ந்து சுழலத் தொடங்கின.

The post லலிதா சஹஸ்ரநாமத்தை அகத்தியருக்கு உபதேசித்த ஹயக்ரீவ பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: