உலகினை உய்விக்கும் உலகியல் ஜோதிடம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

உலகில் நடக்கும் நிகழ்வுகளை கணித்து முன்னரே சொல்லுதல் அல்லது ஏற்கனவே நடந்த நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை கணித்து அதனை விளக்குவதும் உலகியல் ஜோதிடமாகும். தனிப்பட்ட ஜோதிடம் என்பது வேறு. உலகியல் ஜோதிடம் என்பது வேறு. தனிப்பட்ட நபரின் ஜாதகம், உலக நிகழ்வுகளுக்குள் உட்பிரிவுகளாக இருக்கும் என்பது நுட்பமானது. உதாரணத்திற்கு, உலகில் நடக்கும் பேரிடர்கள், பெரும் விபத்துகள் மற்றும் கொள்ளை நோய்களில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது, உலகியல் நடப்பிற்குள்தான் தனி மனித ஜாதகம் உட்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மனிதன் எத்தனை சிந்தித்தாலும் உலகின் நிலை தன்மைதான் மனித வாழ்வின் நிலை தன்மைக்கு அஸ்திவாரம் என்பதை அறியலாம்.

உலகியல் ஜோதிடத்தின் முன்னோடி: நாஸ்டர்டாமஸ் கி.பி.1503-ஆம் ஆண்டு நாஸ்டர்டாமஸ், பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். இவரின் பல பதிவுகளும், நிகழ்வுகளும் சொன்னவையாவும் உலகெங்கிலும் நடந்திருப்பது என்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

* சொன்னது: 21-ஆம் நூற்றாண்டில் வானில் இரண்டு அலுமினியப் பறவைகள் நெருப்புடன் ஒரு நகரத்தை தாக்கும். அதனால், ஒரு பெரிய யுத்தம் ஏற்படும்.

நடந்தது: அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலை இவர் முன்கூட்டியே சொன்னது.

* சொன்னது: கோட்டை முற்றுகையிடப்பட்டு துரோகிகள் உயிரோடு சமாதி ஆவார்கள்.

நடந்தது: ஹிட்லர் கோட்டைக்குள் தானே தற்கொலை செய்து கொண்டார்.

* சொன்னது: துறைமுகங்களுக்கு அருகில் நகரங்கள் மிகவும் மோசமான பேரழிவு தாக்குதலுக்கு உட்படும். பஞ்சம், கொள்ளை நோய் ஏற்பட்டு மக்கள் உதவி கேட்டு ஓலமிடுவார்கள்.

நடந்தது: அமெரிக்கா ஹிரோஷிமா – நாகசாகி ஆகிய நகரங்களில் சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசி நகரங்களை நாசமாக்கியது.

இந்தியாவை பற்றி…

* சொன்னது: தன்னுடைய நாட்டைவிட்டு அந்நிய நாட்டில் சுற்றிக் கொண்டிருப்பவர். தனது விடுதலைக்காக பல நாடுகள் செல்வார். விமான விபத்தில் உயிரிழப்பார்.

நடந்தது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி முன்னரே கூறியிருந்தார்.

* சொன்னது: மூன்று புறம் கடல் சூழ்ந்த ஒரு நாட்டில் சக்தி வாய்ந்த பெண்மணி ஒருவர் அவரின் சொந்த மெய்காப்பாளனால் கொல்லப்படுவார்.

நடந்தது: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தனது மெய்காப்பாளனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு இவர் முன்னரே நடக்கும் என கணித்து எழுதிய பல விஷயங்கள் யாவும் நடந்திருப்பது என்பதும் உலகியல் ஜோதிடமே.

உலகியல் ஜோதிட ஆய்வு:

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு நாட்டை குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு நாட்டிற்குள் உள்ள நகரங்கள் அனைத்தும் ஒவ்வொரு ராசியாக உள்ளது. சில ஜோதிட ஜாம்பவான்கள் உலகம் முழுவதும் பயணித்து ஒவ்வொரு ராசியை தொகுத்து வெளியிட்டிருக்கின்றார்கள். இதில் குறிப்பிடும் படியாக, மறைந்த குருநாதர் திரு.நெல்லை வசந்தன் அவர்களும் உலகியல் ஜோதிடத்தை பற்றி ஆய்வு செய்து தகவல்கள் திரட்டியுள்ளார்.

தற்போது அது புத்தகமாக வெளிவந்துள்ளது. இதனால், பிரபஞ்சத்தில் பயணிக்கும் கோள்களின் பார்வை, கோள்கள் அமைந்த ராசியில் ஏற்படும் மாற்றம், இரு கோள்கள் ஒரே ராசியில் இணைவதால் உண்டாகும் விளைவுகள் ஆகியவற்றை கொண்டு நிகழ்வுகளை கணிப்பதற்கு ஏதுவாகும். இவற்றை பல செய்திகளின் வாயிலாகத்தான் நாம் உறுதி செய்து கொள்ள இயலும். ஆகவே, ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே உலகியல் ஜோதிடத்தை பயில்வதற்கான சாத்தியங்கள் உண்டு.

இந்த ஆய்வுகள் மூலமாக ஒவ்வொரு நாட்டின் ராசி மண்டலத்தையும் சிறப்பாக நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சொல்லலாம். முயற்சியும் பயிற்சியும் கண்டிப்பாக வழி செய்யும். உலகியல் ஜோதிடம் பற்றி நாம் விவரங்களை எடுக்கும் போது, சிலர் ஒவ்வொரு நாட்டின் சுதந்திர நாடாக மாறிய நாளையும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் ஒவ்வொரு நாட்டின் மக்களாட்சியாக பிரகடனம் செய்த நாளையும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். எது எப்படியாயினும் நமது சுய ஆய்வுகள் எந்த நேரத்திற்கு பொருத்தமாகிறதோ அதை ராசி மண்டலமாக உறுதி செய்து கொள்ளலாம்.

உலகியல் ஜோதிடத்தால் சமூகத்திற்கு என்ன பயன்?

ஒரு நாட்டில் நிகழும் நன்மை, தீமைகளை சொல்வதால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பெரிய விபத்துகளை தவிர்க்கலாம். அப்படியே விபத்துகள் நிகழ்ந்தாலும் உயிர் சேதங்களை குறைக்கலாம். நாளைய விஷயங்களை இன்றே சிந்திக்கும் போது மனித சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். நாட்டில் ஒரு பேரிடர் வரும் பட்சத்தில் அதனை கையாளுவதற்கான வழிவகைகளை கண்டுபிடிக்கலாம்.

அதாவது, கிரகங்கள் எல்லாம் ஒளியியலை அடிப்படையாக கொண்டே விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த ஒளியியலின் தன்மைகளை கட்டுப்படுத்துவதால் தீமைகள் குறையலாம். அறிவியலின் முன்னேற்றப் பாதையில் ஜோதிடமும் ஓர் அறிவியலே என்பதை யாவரும் உணரும் தருணம் கண்டிப்பாக வரும்.

உலகியல் ஜோதிடத்தில் உள்ள அபாயம் என்ன?

கடந்த காலத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு ஜோதிடர் முன்னாள் பிரதமர் அகால மரணமடைவார் என இரண்டு வருடத்திற்கு முன்பே கணித்திருந்தார். அவ்வாறு, நிகழ்வுகளும் நடந்தேறியது. பின்பு, அந்த ஜோதிடரை விசாரணையில் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி பின்பு இறந்தே போனார். இதுபோலவே, காந்தியடிகள் அகால மரணமடைவார் என்று குடந்தையிலுள்ள ஒரு ஜோதிடர் கூறியிருந்தார். பின்பு அவருக்கும் சில கடுமையான விமர்சனங்கள் வந்தன.

உலகியல் ஜோதிடத்தில் இன்றைய தடம்:

இன்று விளையாட்டு போட்டிகளில் எந்த அணி வெல்லும் என்றும், அதில் யார் சிறப்பான விளையாட்டு வீரர்களாக தேர்வு பெறுவார்கள் என்றும் அரசியல் களத்தில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்கள், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று கணித்து அதை செய்திகளாக, பத்திரிகைகளிலும் சமூக ஊடகத்திலும் பார்க்கப்படுகிறது. இது மட்டுமே சிறப்பல்ல… இது இன்னும் வளர்ச்சி கண்டு நாட்டின் வளமைக்கும் மனிதத்திற்கு பயன் சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். மனிதத்திற்கு தேவையானதே சிறந்தது.

The post உலகினை உய்விக்கும் உலகியல் ஜோதிடம் appeared first on Dinakaran.

Related Stories: