கடன் பிரச்சனை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

தெய்வங்களில் மிகவும் எளிமையானவர் கணபதி. மிக எளிய முறையில் செய்யும் பூஜைகளைக் கூட ஏற்றுக் கொண்டு, மனதால் நினைத்து தியானித்த அந்த நிமிடமே நமது கவலைகளை ஓட செய்யக் கூடியவர் கணபதி. மஞ்சள், மாட்டு சாணம் என எதில் பிடித்து வைத்தாலும் அதிலும் எழுந்தருளி அருள் செய்யக் கூடியவர். அதே போல் எதுவுமே கிடைக்கவில்லை என இரண்டே இரண்டு அருகம்புல்லை கிள்ளி வைத்து வேண்டிக் கொண்டாலும், மனம் குளிர்ந்து வேண்டியதை அருளக் கூடியவர் விநாயகர்.

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும். வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரை வணங்கினால் தீயசக்திகள் விலகும். வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால் நீண்டநாட்களாக தீராத நோய்கள் தீரும். அந்த வரிசையில் தோரண விநாயகரை வழிபட்டால் கடன்கள் யாவும் தீரும்.

பொதுவாக கோவில்களில் கோஷ்டத்தில் ( கோவிலின் கருவறை சுற்றி உள்ள வெளிப்புற பகுதி) அமர்ந்திருக்கும் விநாயகர் ரூபத்தை வழிபட்டல் அனைத்து தெய்வங்களின் திருவருள் கிடைக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அப்படி சக்தி தேவியர்கள் தனியாக கோவில் கொண்டிருக்கும் தலங்களில், தோரண வாயிலை பார்த்தபடி அம்பிகைக்கு வலப்புற சந்நிதியில் காட்சி தருபவருக்கு தோரண விநாயகர் என்று பெயர்.

தோரண விநாயகர், ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலை, மேலிரு கைகளில் அங்குசம், பாசமும், கீழ் இரு கைகளில் தந்தம், மோதகம் ஏந்தியவாறு அருள் செய்வார். இவர் தனது கையில் உள்ள தந்தத்தால் நமது வாழ்வில் உள்ள அனைத்து கடன்களையும் தீர்த்து விடுவார் என சிவ ஆகம ஆதிகள் சொல்கின்றன. மூலஸ்தானத்தில் இருந்து, தோரண கணபதி அமர்ந்திருக்கும் இடம் ப்ரம்ம ஸ்தானமாக இருக்கும். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக உள்ளதால் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடியவர்.

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் என மூன்று வகையான கடன்கள் நிச்சயம் உண்டு. இவற்றில் மானுட கடன் என்பது சக மனிதர்களிடம் நாம் பெற்ற கடன். இந்த கடனை விரைவில் அடைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ தோரண கணபதியை வழிபடுவது சிறந்த பலன் அளிக்கும்.

செவ்வாய், சனி, ஞாயிறு இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையை தேர்வு செய்து தொடர்ந்து 6 வாரங்கள் அந்த கிழமையில் சென்று தோரண கணபதியை வழிபட வேண்டும். அவருக்கு நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும்.

கணபதியின் முன் மேகலை – பத்மபீடத்தின் முன் அமர்ந்து தோரண கணபதியின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து வணங்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என ஐந்து வகை பழங்களை நைவேத்தியமாக படைத்து, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்வதால் விரைவில் கடன் அனைத்தும் அடைபட்டு, நிம்மதி கிடைக்கும்.

தோரண கணபதி மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா

The post கடன் பிரச்சனை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: