15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு பிட்னஸ் சான்று கட்டாயம்: திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு இன்று முதல் நேரக்கட்டுப்பாடு

* விபத்துக்களை தடுக்க நடவடிக்கை
* கூடுதல் எஸ்பி அதிரடி உத்தரவு

திருமலை: 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு பிட்னஸ் சான்று கட்டாயம், திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு இன்று முதல் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பக்தர்கள் காயம் அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் அதிவேகம் மற்றும் அலட்சியமே என்று பக்தர்களும், போலீசாரும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் மலைப்பாதையில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துக்களை தடுக்க திருமலை போக்குவரத்து போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூடுதல் எஸ்பி முனிராமய்யா நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி மலைப்பாதையில் தினந்தோறும் அரசு போக்குவரத்து பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தவிர்த்து கார் மற்றும் இதர வாகனங்கள் என்று 20 ஆயிரம் வாகனங்கள் மலைப்பாதையில் தொடர்ந்து வந்து செல்கின்றன.
இதில் முதலாவது மலைப்பாதை என அழைக்கப்படும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதை 17 கிலோமீட்டர் மட்டுமே இருந்தாலும் 63 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் சில வளைவுகள் அபாயகரமான வளைவுகளை கொண்டது. இரண்டாவது மலை பாதை எனப்படும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை சாலை 18 கிலோமீட்டர் இருந்தாலும் ஆறு வளைவுகள் மட்டுமே உள்ளது. இந்த மலைப்பாதை சாலையில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது.

டெம்போ ட்ராவலர் மற்றும் துபான் என அழைக்கப்படும் வாகனம் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. அதற்கு காரணம் முழு பிட்னஸ் இல்லாத வாகனங்கள் கொண்டு வருவது மற்றும் மலை பாதையில் ஓட்டுவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அலட்சியமாக வாகனங்கள் ஓட்டுவது விபத்திற்கு காரணம். எனவே மலைப்பாதையில் செல்வதற்கான ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கக்கூடிய வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். வாகனத்திற்கு உண்டான இருக்கை எண்ணிக்கை மிகாமல் பயணிகள் இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் அவர்கள் தரிசன டிக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்து கொண்டு வருவதால் நேரடியாக வந்து சுவாமி தரிசனம் செய்து உடனடியாக அவர்கள் ஊருக்கு புறப்படுகிறார்கள்.

இதனால் டிரைவர்கள் சரியான தூக்கம் இல்லாததாலும் ஆங்காங்கே தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே டிரைவர்களுக்கும் உரிய ஓய்வு அளித்து அதன் பிறகு செல்ல வேண்டும். மலைப்பாதை சாலையில் விபத்துக்கள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேகக்கட்டுப்பாடு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 28 நிமிடங்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 40 நிமிடங்கள் என நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த நேரத்திற்கு முன்னதாக வரக்கூடாது. வாகனங்களை குறைந்த வேகத்தில் ஓட்ட வேண்டும். அதற்கு முன்னதாக மலைப்பாதையில் வேகமாக ஓட்டிச் சென்று வரக்கூடிய வாகனங்கள் திருமலைக்கு மீண்டும் வராத வகையில் தடை விதிக்கப்படும், மேலும் அபராதம் வசூலிக்கப்படும்.

அலிபிரி சோதனை சாவடி அருகே போக்குவரத்து துறை மற்றும் விஜிெலன்ஸ் அதிகாரிகள் இணைந்து வாகனங்கள் மலைப்பாதை சாலையில் செல்வதற்காக பிட்னஸ் உள்ளதா? என்று ஆய்வு செய்து அனுப்பும் நடைமுறை நாளை முதல் (இன்று) அமலுக்கு கொண்டு வரப்படும். மலைப்பாதையில் வரக்கூடிய வாகன ஓட்டிகள் முன்னாள் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல வேண்டாம். வெளியூரிலிருந்து வரக்கூடியவர்கள் முந்தி செல்ல முயல்வதால் மலைப்பாதையில் சாலையின் தன்மை அறியாமல் அவர்கள் பயப்படுவதோடு வாகனத்தை அங்கேயே நிறுத்தி விடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கருடாகிரி நகர் காட்டேஜ் சோதனைசாவடியில் கூடுதல் எஸ்பி மலை பாதைக்கு வந்த வாகனங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

நிர்ணயித்த நேரத்திற்குள் வந்தால் அபராதம், தடை
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்கு 28 நிமிடங்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 40 நிமிடங்கள் என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்படட நேரத்திற்கு முன்னதாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, மீண்டும் மலைப்பாதையில் செல்லாத வகையில் தடை விதிக்கப்பட உள்ளது. இதற்காக அலிபிரி சோதனை சாவடியில் சாலைக்கான சுங்கவரி ரசீது பெரும்போது அந்த வாகனம் செல்லும் நேரம் குறிப்பிடப்படும். அதில் இருந்து திருமலைக்கு ஜிஎன்சி சோதனை சாவடி அருகே வாகனங்கள் வரும்போது, அந்த சுங்க கட்டண ரசீது ஸ்கேன் செய்யப்படும். அப்போது நிர்ணயிக்கப்பட்ட 28 நிமிடத்திற்குள் வந்தால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் மலையில் இருந்து கீழே இறங்கும்போது ஜிஎன்சி சோதனை சாவடியில் ஸ்கேன் செய்து 40 நிமிடங்களுக்குள் வந்தால் அபராதம் விதித்து அந்த வாகனங்கள் மலைக்குசெல்ல தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு பொது போக்குவரத்து பயன்படுத்தலாம்
கொரோனாவுக்கு பிறகு திருப்பதிக்கு சொந்த வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மலைப்பாதையில் ஓட்டக்கூடிய டிரைவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், திருப்பதி வரையில் சொந்த வாகனத்தில் வந்துவிட்டு, பின்னர் அங்கிருந்து திருமலைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தினை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செல்பி எடுப்பதால் விபத்து அதிகரிப்பு
திருப்பதி மலைபாதையில் சில வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்பி மற்றும் போட்டோ எடுக்கின்றனர். இதனால் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி இறங்குவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் சாலைகளில் ஆங்காங்கே வானங்களை நிறுத்தி செல்வி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூடுதல் எஸ்பி தெரிவித்தார்.

The post 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு பிட்னஸ் சான்று கட்டாயம்: திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு இன்று முதல் நேரக்கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: