ஆஸ்கர் பாகன் அடங்கிய குழு கம்பம் வருகை ‘ஆபரேஷன் அரிசிக்கொம்பன்’: யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி; வனத்துறை சார்பிலும் ரூ.5 லட்சம் நிவாரணம்

உத்தமபாளையம்: அரிசிக்கொம்பனை பிடிக்க ஆஸ்கர் பாகன் அடங்கிய குழு கம்பம் வந்துள்ளது. யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். வனத்துறை சார்பிலும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை கடந்த ஏப். 30ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால், அரிசிக்கொம்பன் யானை, மாவடி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேதகானமெட்டு வனப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதியான மேகமலை மற்றும் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கடந்த 27ம் தேதி தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது. டூவீலரில் வந்த பால்ராஜ் (65) என்பவரையும் தாக்கியது. தொடர்ந்து வனத்துறை ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் தாக்கியது. பின்னர் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி தோட்டப்பகுதிகளின் வழியே சென்று நேற்று முன்தினம் இரவு ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை அருகில் உள்ள காப்புக்காடு என்ற இடத்தில் அடர்ந்த வனத்தில் நிலை கொண்டுள்ளது. யானையின் நடமாட்டம் குறித்து 12 வனத்துறை குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் யானையை பிடிக்க, 3 கும்கி யானைகள், கம்பத்தில் தயார் நிலையில் உள்ளது. இன்று (மே 31), 3 கும்கிகளையும் காப்புக்காடு பகுதிக்குள் அழைத்து செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு, பிடிக்க 5 பேர் கொண்ட மயக்க ஊசி நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர். சுருளி அருவிக்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை 3 நாட்களாக தொடர்கிறது. முதுமலை மட்டும் அல்லாமல், எங்கெல்லாம் யானைகள் திமிறி மிரட்டுகிறதோ, அங்கு யானைகளின் சமிக்ைஞ மொழிகளை பேசி மிக தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடியினர் ஆவர். ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் நேற்றிரவு கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசிக் கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர, கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். அரிசிக்கொம்பனை பிடிக்கும் ஆபரேஷன் இன்று (மே 31) முதல் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே யானை தாக்கியதில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு பால்ராஜின் உடலுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை பால்ராஜின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கி ஆறுதல் கூறினார். பால்ராஜ் குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பால்ராஜின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில், யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த தொகையும் பால்ராஜின் குடும்பத்திற்கு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

The post ஆஸ்கர் பாகன் அடங்கிய குழு கம்பம் வருகை ‘ஆபரேஷன் அரிசிக்கொம்பன்’: யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி; வனத்துறை சார்பிலும் ரூ.5 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Related Stories: