ஒன்றிய அரசின் அவசர சட்டம் கெஜ்ரிவாலுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆதரவு திரட்டி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியை முதல்வர் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சீதாராம் யெச்சூரி, ‘‘ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது அரசியலமைப்பிற்கு எதிரானது. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை காப்பாற்ற முன்வரவேண்டும். மாநிலங்களவை அல்லது எங்கு இருந்தாலும் ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும். இந்த விவகாரத்தில் அரசியல் மாறுபாடுகளை மறந்து காங்கிரஸ் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

The post ஒன்றிய அரசின் அவசர சட்டம் கெஜ்ரிவாலுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: