ஊத்துக்கோட்டை அருகே உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பெரம்பூர் கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவ – மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வியாபாரம், வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல இருசக்கர வாகனங்கள் மூலம் பெரம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

மேலும் பாலவாக்கம், லட்சிவாக்கம், சூளைமேனி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண்கள் பிரசவம் மற்றும் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைபெற மருத்துவமனைக்கு செல்ல பெரம்பூர் பஸ் நிறுத்தம் வரவேண்டும். பின்னர் அங்கிருந்து நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களிலோ செல்ல வேண்டும். இந்த பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படும். எனவே பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் 2018-2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக எம்.பி. வேணுகோபால் தொகுதி நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை நிதி ஒதுக்கப்பட்டு பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் புதிய உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு 3 மாதங்கள் மட்டுமே எரிந்தது பின்னர் பழுதடைந்துவிட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் கிராமத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் மக்கள் இருளில் நிற்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல உயர் கோபுர மின்விளக்கில் 4 லைட்டில் தற்போது 2 மட்டுமே உள்ளது. மற்றொரு லைட் அரைக்கம்பத்தில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் 3 வருடமாக எரியாத மின் விளக்கை எரிய வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: