மர்ம உறுப்பை கடித்து வாலிபரை கொன்ற வழக்கில் 2 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்

திருவொற்றியூர்: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் முனியசாமி (39). இவர், சென்னை ரெட்டேரியில் உள்ள ஒரு டிபன் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி முனியசாமி போதையில் மாதவரம் மேம்பாலம் அருகே சென்றபோது, அங்குள்ள ஒரு கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அதே வருடத்தில் ஜூன் மாதம், ரெட்டேரி அருகே பாலாஜி என்பவரின் மர்ம உறுப்பையும் முனியசாமி கடித்து வைத்துள்ளார்.

இதில் பாலாஜி படுகாயமடைந்தார். இந்த 2 வழக்கில் முனியசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜாமீனில் முனியசாமி வெளியே வந்தார். இந்த வழக்கு மாதவரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த வழக்கில் முனியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து முனியசாமியை ஆஜர்படுத்த மாதாவரம் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் துணை ஆணையர் சக்திவேல் உத்தரவின் பேரில், புழல் உதவி ஆணையர் ஆதிமூலம், மாதவரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை போலீசார் முனியசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே உள்ள ஒரு வீட்டில் முனியசாமி பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

The post மர்ம உறுப்பை கடித்து வாலிபரை கொன்ற வழக்கில் 2 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Related Stories: