சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரித்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சி பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்பு பெற்ற நகரம், காஞ்சிபுரம் பட்டு உலகளவில் பிரசித்தி பெற்றதும், காஞ்சிபுரம் வைணவம், சைவம் மற்றும் சமண மதங்களின் முக்கிய கோயில்கள் அமைந்துள்ள நகரம். இந்தியாவின் தலைசிறந்த 7 நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்றாக திகழ்கிறது.

இந்நகரின் மாண்பையும், இந்நகருக்கு நாள்தோறும் சுற்றுலாவாசிகளும், வியாபார நிமித்தம் மற்றும் யாத்திரிகர்களாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நகரின் மொத்த மக்கள் தொகை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. எனவே, நகரில் வாழும் மக்கள் மற்றும் இந்நகருக்கு வந்து செல்லும் மக்கள் ஆகியோரின் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டியது மாநகராட்சியின் முக்கிய கடமைகளில் ஒன்று. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரதான சாலைகளிலும், கோயில் வளாகங்களிலும், பள்ளி பகுதிகளிலும் கால்நடைகள் சுற்றித்திரிவதால், சாலையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நகருக்கு வந்து செல்லும் சுற்றுலாவாசிகள், யாத்திரிகர்கள் ஆகியோர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் உள்ள நேரத்தில் இவ்வாறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றபோது போக்குவரத்து தடை ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தானநிலை ஏற்பட காரணமாக உள்ளது. எனவே, கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நகர் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டரால் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் கால்நடைகளை வளர்க்கும் அதன் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறைப்படி பாதுகாப்பாக தங்களது கால்நடை தொழுவத்திலோ அல்லது தங்களது வீடுகளிலோ வைத்து பராமரிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில், அவ்வாறு பிடித்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், உரிமையாளர்கள் அற்ற கால்நடைகள் என கருதி, அவை கோசாலையில் ஒப்படைக்கப்படும். யாரும் உரிமை கோர இயலாது. மேலும், பொது இடங்களில் சாலைகளில் கால்நடைகள் விடும் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புறங்கள் விலங்குகள் மற்றும் பறவைகள் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்டம் 1997ம் ஆண்டு பிரிவுகள் மற்றும் உயிர் மற்றும் உடைமை சேதப்படுத்துவதற்குண்டான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 208ன் கீழ் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: